புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

உலகில் மிக அதிகமானோர் உயிரிழப்பது புகையிலையால்தான்.

இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறக்கினறனர்.

புகையிலைப் பழக்கத்தால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய்கள் எனப் பல கேடுகள் நேருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் நேரும் கொடிய நோய்களினால் ரூ.1 லட்சத்து 4,500 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

ஐ.நா. உலக சுகாதார நிறுவனத்தால் மே 31 உலக புகையிலை ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளில், மத்திய அரசு புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்கி சாதனை படைக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ள முக்கிய நடவடிக்கைகளான பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை, புகையிலை அடிமைத்தனத்திலிருந்து விடுபட மருத்துவ உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

இந்திய அளவில் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் புகை பிடிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

எனவே, தமிழகத்தில் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

2014-ஆம் ஆண்டுக்கான புகையிலை ஒழிப்பு நாள் கோரிக்கையாக புகையிலைப் பொருள்களின் மீதான வரிகளை அதிகமாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவாக ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து புகையிலைப் பொருள்கள் மீதும் 65 சதவீதம் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது.

இதே முறையில் மதிப்புக் கூட்டுவரி விதிக்க தமிழக அரசும் முன் வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

TAGS: