உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திங்களன்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அதன் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் அலுவலகத்தை நோக்கி பாஜக மகளிர் அணியினர் அணி திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அகிலேஷ் யாதவ் அலுவலகத்தை நுழைய முயன்ற போது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை கலைக்க முயன்றனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினர் முதலமைச்சரின் உத்தரவின்பேரில், குண்டர்களைப்போல் செயல்படுகிறார்கள் என்று அந்த மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான குசும் ராய் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயலுகின்றனர் என்று சமாஜ்வாதி கட்சி தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முன்னதாக திங்கள் காலை உயிரிழந்த பெண்களின் குடும்பத்தை சந்தித்த நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
கடந்த மே மாதம் 28ஆம் தேதி அன்று காலை இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் மரத்திலிருந்து தொங்கிய நிலையில், இரண்டு பதின்மவயதுப் பெண்கள் கண்டெடுக்கப்பட்டனர்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேத பரிசோதனைகள் தெரிவித்திருந்தன. இதுவரை இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட இரண்டு காவல் துறை அதிகாரிகள் உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதவி மையம்
இதற்கிடையில் ‘ரேப் க்ரைசிஸ் செண்டர்’ எனப்படும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களுக்கான உதவி மையங்கள் நாடளவில் அமைக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தான் தனக்கு முன்னுரிமை வாய்ந்தவை என்று தெரிவித்தார்.
மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படும் இந்த உதவி மையங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ ரீதியான உதவிகள் மற்றும் சட்ட ரீதியான உதவிகள் ஆகியவற்றை அளிக்கும் என்று அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஐநா கண்டனம்
இதற்கிடையில் இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை ஒரு ‘கொடூரமான சம்பவம்’ என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்த குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கவனிக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த இந்த பெண்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், இந்தியாவில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் லிசே கிராண்டெ தெரிவித்துள்ளார். -BBC