முழு உற்பத்தித் திறனை எட்டியது கூடங்குளம்

koodangulam_nuclear_power_plantதமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின்நிலையம், தனது முழு உற்பத்தி அளவான 1000 மெகாவாட்ஸை எட்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1000 மெகாவாட்ஸ் எனும் அதிகபட்ச மின் உற்பத்தித் திறணை எட்டியுள்ள முதல் அணுமின் நிலையம் கூடங்குளமே என்று அதன் இயக்குநர் சுந்தர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த அணல்மின் நிலையம் பல சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களுக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின் உற்பத்தியை தொடங்கியது.

இன்று-சனிக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் கூடங்குளம் அணல்மின் நிலையத்தின், முதல் அணு உலை, 1000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்தது என்று அந்த மின் நிலையத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் படிப்படியான தனது உற்பத்தி அளவை அதிகரித்து வந்துள்ளது.

தொடர்ச்சியாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அந்த அணு உலையை ஆய்வு செய்து, மின் உற்பத்தியை அதிகரிக்க அனுமதியளித்து வந்தனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் பிரிவு தனது முழு உற்பத்தி திறணை எட்டியபோது, அனைத்து தொழில்நுட்பச் செயல்பாடுகளும் திருப்திகரமாகவும், வரையறுக்கப்பட்ட அளவுக்குள் இருந்ததாகவும் அதன் செய்தி குறிப்பு கூறுகிறது.

இந்த அணுமின் நிலையம் இந்தியாவின் 21 ஆவது அணுமின் நிலையமாகும். இது சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்களில் அமைக்கப்பட்டது.

TAGS: