புதுடெல்லி: வன்முறைகள், குழப்பங்கள் இல்லாத அமைதியான சூழ்நிலையில், இரு தரப்பு உறவுக்கான பேச்சுவார்த்தையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்ததாக ஜூன் 2ம் தேதி மோடிக்கு, ஷெரீப் கடிதம் எழுதினார். அதற்கு நன்றி தெரிவித்து, பதில் கடிதத்தை மோடி அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மோடி கூறியுள்ளதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு அமைதி, நட்பு, ஒத்துழைப்பு ஆகியவை அடங்கியதாக இருக்க வேண்டும். இது நமது இளைஞர்களுக்கு அபிரிமிதமான வாய்ப்புகளை அள்ளித்தரும். இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும். இந்த மண்டலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும்.
தங்களுடைய டெல்லி பயணத்தின்போது மேற்கொண்ட பேச்சு இரு தரப்பு உறவும் மேம்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நான் உங்களுடனும், உங்கள் நாட்டுடனும் மிகவும் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன். வன்முறைகள், குழப்பங்கள் இல்லாத, அமைதியான சூழ்நிலையில் இரு தரப்பு உறவுக்கான பேச்சுவார்த்தையில் புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகிறோம். எனது தாயாருக்கு அனுப்பிய சேலைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கராச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி உயிர்களை பலிவாங்கும் இதுபோன்ற காட்டுமிராண்டிதனத்தை கண்டிக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.