ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இன்று பதவியேற்பு

  • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
  • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை (செப்.29) பதவியேற்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002-ஆம் ஆண்டு மார்ச் வரை ஏற்கெனவே

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தன.

பெங்களூரில் முகாமிட்டிருந்த தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்குள் கூடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூடத் தொடங்கினர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி, சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக (முதல்வராக) ஓ.பன்னீர்செல்வத்தை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

தொண்டர்களால் நிரம்பி வழிந்தது: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு மேல் தொண்டர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டே இருந்தனர். அவர்களை பெரும் உணர்ச்சிப் பெருக்குடன் கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி வாழ்த்துக் கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு பிற்பகல் 3.17 மணியளவில் வந்தனர். அதன்பிறகு, அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. மாலை 4 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

முதல்வர் தேர்வு: ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுக்கும்படி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த தகவல் எம்.எல்.ஏ.க்களிடம் கூறப்பட்டதாகவும், அதை எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு பின்னர் கலைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, முக்கிய அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்கு ஒரே வாகனத்தில் சென்றனர். மாலை 6.30 மணியளவில் ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்தனர். அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும், அவர் தலைமையில் ஆட்சி அமைக்கக் கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் அவர்கள் அளித்தனர்.

ஆட்சி அமைக்க அழைப்பு: இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்தை ஆளுநர் ரோசய்யா கேட்டுக் கொண்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டது.

இன்று பதவியேற்பு: தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதை தலைமைச் செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஓ.பன்னீர்செல்வத்துடன் புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

தமிழகத்தின் 24-ஆவது முதல்வர்

தமிழகத்தின் 24-வது முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம், பி.யூ.சி., வரை படித்துள்ளார். 1996 வரை பெரியகுளம் நகராட்சி தலைவர் பொறுப்பை வகித்தார். அதன்பிறகு, 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அப்போது, முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக வேண்டிய சூழ்நிலையில், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்பு, பொதுப்பணித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவராகச் செயல்பட்டார். கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தமிழக நிதியமைச்சராகவும், அவை முன்னவராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

TAGS: