தீபாவளிக்கு விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’, விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’ ஆகிய படங்கள் மட்டுமே வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
‘கத்தி’ படம் கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு புதிய சாதனை படைக்க உள்ள நிலையில், ‘பூஜை’ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 400 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி அங்கு புதிய சாதனை படைக்க உள்ளதாம்.
சமீப காலத்தில் ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு வெளியாக உள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள். விஷால் நடிக்கும் எந்த ஒரு தமிழ்ப் படமும் தெலுங்கில் டப் செய்யப்படுவது வழக்கம்தான். அப்படியிருக்க இந்தப் படத்திற்கு மட்டும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்க ஸ்ருதிஹாசனும் காரணம் என்கிறார்கள்.
ஸ்ருதிஹாசன் சமீப காலமாக தெலுங்குத் திரையுலகில் முன்னணி இடத்தில் உள்ளார். அது மட்டுமல்ல அவருடைய கிளாமரான நடிப்பால் பல ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். ‘பூஜை’ படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த தெலுங்குத் திரையுலகினர் இந்தப் படத்தை டப்பிங் படம் என்பதையும் மறந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம்.
அதனால்தான் படத்திற்கு இந்த அளவிற்கு தியேட்டர்கள் கிடைத்துள்ளது என்கிறார்கள். அதோடு, இயக்குனர் ஹரி இயக்கும் படங்களில் ஆக்ஷனும் அதிகமாக இருக்கும். அது தெலுங்கு ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து விடும் என்கிறார்கள்.
“பூஜை, கத்தி” இந்த இரண்டு படங்களுமே தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுவதாலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் வெளியாவதாலும் தென்னிந்தியத் திரையுலகில் இந்த வருட தீபாவளி தமிழ்ப் படங்களுக்கான கொண்டாட்டமாகவே அமையப் போகிறது.