ரூ.53 ஆயிரம் கோடியில் உள்நாட்டில் தயாராக உள்ள நீர் மூழ்கி கப்பல்கள்

ship-submarineபுதுடில்லி: ரூ.80 ஆயிரம் கோடிக்கு, பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பான திட்டங்களுக்கு, பாதுகாப்பு ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில். ரூ. 53 ஆயிரம் கோடி மதிப்பில் கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிலேயே கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவை முக்கியமான பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடியின் மேக் இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையிலும், கடற்படையை நவீனப்படுத்தவும், வலுப்படுத்தவும், இந்திய கப்பல்கட்டும் தளங்களில் 6 கப்பல்கள் கட்டப்படுகின்றன. கப்பல்படைக்கு தேவையான நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு தேவையான வசதிகள், வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கையாளும் திறன் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் கப்பல்கட்டும் திறன் கொண்ட கப்பல்கட்டும் தளங்களில் இந்த கப்பல்கள் கட்டப்பட உள்ளன. இந்த கப்பல்தளங்களை தேர்வு செய்வதற்கான பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடியும். இந்தியாவில் அரசு கப்பல்கட்டும் தளங்கள் உட்பட 7 கப்பல்கட்டும் தளங்கள் உள்ளன. இந்திய கப்பல்படைக்கு தேவையான 6 நீர்மூழ்கி கப்பல்கள், ரூ.53 ஆயிரம் கோடியில் கட்டப்பட உள்ளன.

இதற்கான ஒப்புதல் மத்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த பாதுகாப்பு ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் பேசிய அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு அரசின் கவனத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து தடைகள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் உற்பத்திக்கு இடையூறாக உள்ள அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும் என கூறினார்.

இந்திய கடற்படைக்கு 12 டோர்னியர் போர்விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. இது தவிர ராணுவத்திற்கு தேவையான 8 ஆயிரம் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், 300 ஏவுகணைகள் ஆகியவை இஸ்ரேலில் இருந்து ரூ.3,200 கோடி மதிப்பில் வாங்கப்பட உள்ளன.

TAGS: