ஊழல் வாதிகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் : பட்நாவிஸ்

paddமும்பை: மகாராஷ்ட்டிராவில் ஊழலில் சிக்கியவர்கள் பாரபட்சம் காட்டப்படாமல் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்நாவிஸ் தனது முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு ( ஹெட்லைன்ஸ் டுடே ) அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாடுபடுவேன். இதற்கு சிவசேனாவுடன் இணைந்து செயலாற்றுவோம். தம் மீது நம்பிக்கை வைத்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார். சிவசேனா- பாஜ., இடையே எவ்வித நம்பிக்கை குறைபாடும் இல்லை. மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முழு முயற்சி எடுத்து பாடுபடுவேன்.

கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் புரிந்தவர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஊழல் வாதிகள் எங்களது கட்சியில் இருந்தாலும் அவர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் எவ்வித சமரசமும், பாரபட்சமும் கிடையாது. பிரதமர் மோடி நேரிடையாக பேசும் தன்மை படைத்தவர். இவர் யாருடனும் எவ்வித டீலும் பேசவில்லை. தேசிய வாத காங்கிரஸ்சுடன் பேச்சும் நடத்தவில்லை. அவர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள் சிவசேனாவுடன் மட்டுமே நேரடியான பேச்சு நடத்தப்பட்டது.

மோடி மந்திரம் : மோடியின் மந்திரத்தை பின்பற்றுவோம். மக்களுக்கான அரசாக இருந்தால் மக்கள் அரசை காப்பாற்றுவார்கள் என்பது எங்களின் மந்திரம். குஜராத்துடன் போட்டி போட்டு மகாராஷ்ட்டிராவை முன்னேற்ற பணியாற்றுவேன். வளர்ச்சி என்பது மாநிலத்தின் முக்கிய அங்கம் ஆகும். குஜராத் எங்களின் நண்பர்கள். அங்கு நடக்கும் நல்ல விஷயங்களை பின்பற்றுவதில் தவறு ஏதுமில்லை. இவ்வாறு பட்நாவிஸ் கூறியுள்ளார்.

TAGS: