முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 136 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழு நிராகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையில், மூவர் கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை காலை ஆய்வு நடத்தினர். மாலையில், மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், “தமிழக பொதுப் பணித் துறையின் செயல்பாடுகள் சரியில்லை. கதவணைகளில் (ஷட்டர்) பிரச்னை உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் விரைவாக உயர்த்துவதால், அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 136 அடியாகக் குறைக்க வேண்டும்’ என்று கேரள அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு, தமிழக பொதுப் பணித் துறையினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நீர்மட்டம் 142 அடியைத் தாண்டும் நிலை உள்ளதாக, கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தமிழக அதிகாரிகள், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயரும் நிலை ஏற்பட்டால், உடனடியாக உபரி நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதி அளித்தனர்.
மேலும், மேட்டூர், வைகை அணைகள் நீர் நிரம்பும்போது எடுக்கும் நடவடிக்கைகளைப் போலவே, முல்லைப் பெரியாறு அணையிலும் கடைப்பிடிப்போம் என்று தமிழக பொதுப் பணித் துறைச் செயலர் சாய்குமார் தெரிவித்தார்.
கூட்ட முடிவில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள, கேரளத்தின் எதிர்ப்பையும் மீறி முடிவு செய்யப்பட்டது.
மூவர் குழு ஆய்வு: முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியதையடுத்து, மூவர் கண்காணிப்புக் குழுவினர், அணையின் 13 ஷட்டர்களையும் திங்கள்கிழமை காலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, கேரளப் பிரதிநிதியின் சார்பில், 7, 11-ஆவது கதவணைகள் முறையாக இயங்காமல் பாதிப்படைந்துள்ளதாகவும், அதனால், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு தமிழகப் பிரதிநிதியும், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலருமான சாய்குமார் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து, 7, 11-ஆவது கதவணைகள் ஜெனரேட்டர் மூலம் மேலே தூக்கப்பட்டு, கேரளத்தின் பக்கம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், மீண்டும் கதவணைகள் மூடப்பட்டன.
இந்தப் பரிசோதனையில் கதவணைகள் நல்ல நிலையில் இருப்பதாக மூவர் குழுத் தலைவர் எல்.ஏ.வி.நாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதான அணையிலும் மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 11-ஆவது பிளாக்கில் நீர்க் கசிவு இருப்பதாகவும், அதில் சுருக்கி, சுண்ணாம்பு கரைந்து செல்வதாகவும் கேரளத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த, தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், சீப்பேஜ் நீரின் அளவு 137.40 அடியாக இருக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட அளவே இருப்பதால், இது நீர்க் கசிவு இல்லை என்று மறுத்தனர்.
ஆய்வின்போது, தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், வைகை- பெரியாறு கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ், அணையின் செயற் பொறியாளர் மாதவன், உதவிச் செயற் பொறியாளர் சௌந்தரம், கேரள அரசின் சார்பில், கேரள நீர்ப்பாசனத் துறையின் மாநில தலைமைப் பொறியாளர் பி.லத்திகா, கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர், உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன், செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.