இஸ்ரேல், ஜப்பானை இந்தியா பின்பற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர்

indiaநாட்டின் வளர்ச்சிக்கு இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் வழிமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸ்தாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற “இளைஞர்கள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி’யில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக இஸ்ரேலும், ஜப்பானும் தற்போது திகழ்கின்றன. சாம்பல் நிலையில் இருந்து சக்திவாய்ந்த நாடுகளாக இரு நாடுகளும் உருவெடுத்துள்ளன. அந்த இரு நாடுகளும் தேசியவாதத்தில் உறுதியாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

2ஆவது உலகப் போரின் முடிவில், ஜப்பான் நாடு பேரழிவைச் சந்தித்தது. பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து, உலகின் மிகப் பெரிய தொழில் வள நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. இஸ்ரேலும் சுயச்சார்பு மற்றும் தேசியவாதம் ஆகிய கொள்கைகளை பின்பற்றி சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது.

இதேபோல், பல மொழிகள், வாழ்க்கை முறையைக் கொண்ட இந்தியாவில், ஆர்எஸ்எஸ் அமைப்பானது ஒற்றுமைப்படுத்தும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

தனது உரையின்போது, “தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மோகன் பாகவத் பாராட்டுத் தெரிவித்தார்.

TAGS: