தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை

sumi
திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ரா

 

இந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது.

இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை வந்ததாக கடலோர பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்தியக் கடற்படை தினத்தை ஒட்டி, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, இந்தியக் கடற்படையின் இரு போர்க்கப்பல்களான, ஐ.என்.எஸ் குக்ரி மற்றும் ஐ.என்.எஸ் சுமித்ரா ஆகியவை கொல்கத்தா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த எச்சரிக்கைக்குப் பின்னர், அவை செவ்வாய்க்கிழமை கடலுக்குள் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டதாக இந்தியக் கடற்படையின் கேப்டன் டி.கே.ஷர்மா தெரிவித்தார்.

கொல்கத்தா நகரில், குறிப்பாக அதன் துறைமுகப் பகுதியில் , பயங்கரவாதத்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் மத்திய உளவு நிறுவனங்களிடமிருந்து வந்ததாக இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை அதிகாரி பி.என்.மஹாத்தோ தெரிவித்தார்.

கொல்கத்தா பெருநகரப் போலிசார் இந்தத் தகவலையடுத்து நகரின் பல பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவுக்கு மக்கள் நுழையும் ஒரே நில எல்லைப்புறத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். -BBC

TAGS: