அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி:2000 கி.மீ., பாய்ந்து தாக்கும்

agniபலசோர் : 2000 கி.மீ.,க்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையான அக்னி 2 ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஓடிசா கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நிலத்தில் இருந்து நிலத்திற்கு சென்று இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை சோதனை காலை 9.40 மணிக்கு நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணை சோதனை குறித்து ஐடிஆர் இயக்குனர் எம்.வி.கே.வி.பிரசாத் கூறுகையில், இந்த சோதனை ராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளது. அக்னி 2, ஐ.ஆர்.பி.எம்., வகையை சேர்ந்தது.

இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது சோதனை செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புத்துறைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாலாகும்.ராணுவமும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்து, சோதித்துள்ளன. அதிநவீன ரேடார்களின் உதவியால் இந்த ஏவுகணை இயக்கப்படுகிறது. 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை 1000 கிலோ எடை வரை சுமந்து சென்று 2000 கி.மீ., தூரத்திற்கும் அதிகமான தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய திறன் கொண்டது, என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் 700 கி.மீ., வரை செல்லும் அக்னி 1, 3000 கி.மீ.,வரை செல்லும் அக்னி-3, 4000 கி.மீ.,வரை செல்லும் அக்னி 4, 5000 கி.மீ.,வரை செல்லக் கூடிய அக்னி 5 ஆகிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இதே வகையில் நடத்தப்பட்ட அக்னி 2 ஏவுகணை சோதனையும் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: