சகாயம் ஆய்வுக் குழுவுக்கு ஆதரவாக புதிய இயக்கம் தொடக்கம்

sagayam

மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு குறித்து சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு இன்னும், ஒரிரு தினங்களில் விசாரணையை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த குழுவினருக்கு தேவையான தகவல்களை தர சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கூட்டம் மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைப்பாளர் முகிலன் ஏற்பாட்டின் பேரில் நடந்தது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

கனிமவள முறைகேடுகளை விசாரணை செய்யும் சகாயம் குழுவினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உதவ வேண்டும். சகாயம் ஆய்வுக்குழு தனது செயல்பாட்டை மிகவும் வெளிப்படையாக வைத்து இருக்க வேண்டும். மக்கள் எளிமையாக குழுவினரை தொடர்பு கொள்ளும் பொருட்டு மின் அஞ்சல் முகவரி மற்றும் முகநூல் பக்கத்தினை தொடங்க வேண்டும்.

கனிமவள முறைகேடுகள் மிகுதியாக நடந்த இடங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கிருட்டிணகிரி ஆகிய பகுதிகளுக்கு குழுவினர் நேரடியாக வந்து மக்களை சந்தித்து ஆய்வு செய்ய வேண்டும். கனிமவள முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் அல்லாமல் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களின் உடல் நல பாதிப்புகள், குடிநீர், மின் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் கனிமவள முறைகேடுகளை பற்றி தகவல் அளிக்கும் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். விசாரணையில் அந்தந்த பகுதிகளில் தங்கியிருந்து பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் உரிய முறைகேடுகள் பற்றி அறிக்கைகள் தயார் செய்து பெற வேண்டும். அதில் தவறான தகவல்கள் விடப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TAGS: