குடும்ப நல அறுவைச் சிகிச்சை: 11 பெண்கள் சாவு

  • சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் குடும்ப நல சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்த மாநில முதல்வர் ரமண் சிங்.
  • சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் குடும்ப நல சிகிச்சைக்குப் பிறகு, உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்த மாநில முதல்வர் ரமண் சிங்.

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் உயிரிழந்தனர். 49 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிலாஸ்பூர் சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கோமல் பர்தேசி, செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிலாஸ்பூர் மாவட்டம், பெந்தாரி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் கடந்த சனிக்கிழமை குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 83 பெண்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன்பிறகு, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு சனிக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதால், அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் திங்கள்கிழமை 2 பேரும், செவ்வாய்க்கிழமை 9 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 32 வயதுக்கு உள்பட்டவர்கள். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் அமர்சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், “அறுவைச் சிகிச்சையின்போது அதிக ரத்த இழப்பு அல்லது நச்சுத் தொற்று காரணமாக, பெண்கள் இறந்திருக்கலாம்; பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்’ என்றார்.

ரமண் சிங் நேரில் ஆய்வு: இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், செவ்வாய்க்கிழமை மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

இதில், மருத்துவ அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதை மறுக்க முடியாது. அதற்கான முகாந்திரம் உள்ளதால், அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர், சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை இயக்குநர் கமல்பிரீத் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முகாமின் மேற்பார்வையாளராக இருந்த குப்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகாமில் வழங்கப்பட்ட மருந்துகளின் தரம், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட விதம் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இதற்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ரமண் சிங்.

பிரதமர் வலியுறுத்தல்: இதனிடையே, மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரமண் சிங்கிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, பிலாஸ்பூர் சம்பவத்தில் 11 பெண்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த மோடி, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரமண் சிங்கிடம் வலியுறுத்தினார்.

ரமண் சிங் பதவி விலக வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மாநில முதல்வர் ரமண் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் அமர் அகர்வால் ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை (நவம்பர் 12) முழு அடைப்பு போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பூபேஷ் பகேல் கூறியதாவது: ஏற்கெனவே இந்த மாநிலத்தில் கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களின் பார்வை பறிபோனது. கருப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட பலர் பாதிக்கப்பட்டனர்.

எனினும், கடந்த காலங்களில் செய்த தவறுகளில் இருந்து மாநில அரசு இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய தவறுகள் நடந்தபோதிலும், சுகாதாரத்துறை அமைச்சர் அமர் அகர்வாலின் பதவியை ரமண் சிங் ஏன் பறிக்கவில்லை? இதிலிருந்து, சாமானிய மக்களின் உடல் நலனில் மாநில முதல்வருக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ரமண் சிங்கும், சுகாதாரத் துறை அமைச்சர் அமர் அகர்வாலும் பதவி விலக வேண்டும் என்றார் பூபேஷ் பகேல்.

TAGS: