உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி! தருண் விஜய் எம்.பி. கோரிக்கை

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக இல்லாதது வருத்தமளிக்கிறது என மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து தலைவராக உள்ள “வெற்றித் தமிழர் பேரவை’ சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தருண் விஜய் நிகழ்த்திய ஏற்புரை:

நான் உத்தரகண்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழன்னையின் மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் மொழி இமயமலையைக் காட்டிலும் உயர்ந்தது, சிறந்தது.

திருக்குறள், திருவள்ளுவரைத் தெரியாதவர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரிந்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் பேச மறுக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக இல்லாதது எனக்கு வருத்தமளிக்கிறது. தொழிலாளர்களும், விவசாயிகளும் நிறைந்த தமிழகத்தில் பாமர மக்களுக்குப் புரியாத வகையில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது வருந்தத்தக்க விஷயமாகும்.

வட இந்தியாவில் வரும் ஜனவரி மாதத்துக்குள் 500 இடங்களில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மையங்கள் தொடங்கப்படும். அதில் முதலாவது மையத்தை எனது டேராடூன் நகரத்திலிருந்து தொடங்க இருக்கிறேன். தமிழ் மொழிக்காக தொடர்ந்து ஒலிக்கும் எனது குரலைத் தமிழகத் தலைவர்களான கருணாநிதி, வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோர் ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி என்றார் தருண் விஜய்.

மொழியை இழந்தால் நிலத்தை இழப்போம் – கவிஞர் வைரமுத்து: மொழி இருக்கும் நீளம் வரைக்கும்தான் நிலம் நமக்குச் சொந்தம். ஒரு காலத்தில் தமிழ் பேசும் நிலப்பரப்பு குமரி முனைக்குத் தெற்கே 700 மைல் நீண்டிருந்ததாக “அடியார்க்கு நல்லார்’ தெரிவித்துள்ளார். வட வேங்கடம் வரைக்கும் நீண்டிருந்த தமிழினம் இன்று 50,216 சதுர கிலோ மீட்டராகச் சுருங்கிவிட்டது. மொழியை இழந்தால் இருக்கும் சின்ன பரப்பையும் இழந்து போவோம். இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர்கள் நிலம், மொழி என இரண்டையும் இழந்து போவார்கள். அதிகார மையங்களிலும், கல்வி நிலையங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் நிலைபெற்றால்தான் நாம் இருக்கும் நிலத்தை இழக்காமல் இருப்போம். தோள் கொடுக்க வந்திருக்கும் தருண் விஜய்யை தமிழுலகம் பாராட்டுகிறது என்றார் வைரமுத்து.

விழாவில் முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, தமிழறிஞர் அவ்வை நடராசன், முன்னாள் துணைவேந்தர்கள் க.ப.அறவாணன், ம.ராசேந்திரன், “அமெட்’ பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், துரைமுருகன், பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TAGS: