கருத்தடை அறுவைசிகிச்சையில் 13 பெண்கள் பலி: மூடி மறைக்க சத்தீஷ்கர் அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

india-women-jan-2013_0குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டு உயிரிழந்த பெண்களின் குடும்பங்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இச்சம்பவத்தை சத்தீஷ்கார் அரசு முடிமறைக்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் புறநகர் பகுதியான பென்தாரி கிராமத்தில், தேசிய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.

 

நேமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த இந்த முகாமில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 83 பெண்கள் கலந்து கொண்டனர். முகாமில் அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்துக்குள் 60–க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஆர்.கே.குப்தா உள்பட 4 மருத்துவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் டாக்டர் ஆர்.கே.குப்தா கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்டோர்களை கிராமம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களையும் பார்வையிட்டார்.

 

பின்னர் பேசிய ராகுல், இந்த சோகத்தில் ஊழலின் பங்கும் உள்ளது. இவ்விவகாரத்தில் உண்மை என்னவென்றால், அலட்சியம் மட்டும் காரணம் இல்லை. இங்கே ஊழலின் ஒரு பங்கும் உள்ளது, போலி மருந்துகளும் நடமாடியுள்ளது.

 

முகாம் சரியாக நடத்தப்படவில்லை மற்றும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே பயன்படுத்தப்பட்ட மருந்துக்கள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கு இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. நான் மிகவும்  சோகத்தை உணர்ந்துள்ளேன். தாயின் பாதிப்பால் மொத்த குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மற்றும் சுகாதாரத் துறை மந்திரியே பொறுப்பு என்று ராகுல் கூறியுள்ளார்.

TAGS: