கருப்புப் பணத்தை மீட்க முன்னுரிமை: மோடி

  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், ஜி20 மாநாட்டுக்கு இடையே சந்தித்த (இடமிருந்து வலம்) ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசோஃப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா.
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், ஜி20 மாநாட்டுக்கு இடையே சந்தித்த (இடமிருந்து வலம்) ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசோஃப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்பதற்கு தனது அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

“ஜி 20′ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்துள்ள “பிரிக்ஸ்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளான பிரேசில் அதிபர் தில்மா ரூசோஃப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்களிடம், கருப்புப் பணத்தை மீட்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மோடி எடுத்துரைத்தார். இதுகுறித்து அவர்களிடம் மோடி தெரிவித்ததாவது:

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு, இந்தியா கொண்டு வருவதற்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. கணக்கில் வராத கருப்புப் பணத்தால், நாட்டின் பாதுகாப்புக்கு சவால்கள் எழுந்துள்ளன. எனவே, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மோடி.

“பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவர்களுடனான மோடி சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதின் தெரிவிக்கையில், “கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தை, பாதுகாப்புக் கோணத்தில் அணுகியிருப்பது இதுவே முதல்முறையாகும்’ என்றார்.

பிரிக்ஸ் வங்கி அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வலியுறுத்தல்: இதேபோல், “பிரிக்ஸ்’ அமைப்பின் சார்பில் வளர்ச்சி வங்கி அமைக்க முடிவு செய்துள்ள விவகாரம் குறித்தும் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர்களிடம் மோடி கூறியதாவது:

பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிஸா நகரில் நடைபெற்ற “பிரிக்ஸ்’ அமைப்பின் 6-ஆவது உச்சி மாநாட்டின்போது “பிரிக்ஸ்’ அமைப்பின் சார்பில் வளர்ச்சி வங்கி அமைப்பதென்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த முடியும் என இந்தியா நம்புகிறது. அந்த வங்கியை 2016ஆம் ஆண்டுக்குள் தொடங்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது.

அந்த வங்கியின் தலைவர் பதவிக்கு எங்களது வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளோம்.

“பிரிக்ஸ்’ வளர்ச்சி வங்கி, அந்த வங்கியின் இருப்பாக வைக்கப்படும் முதலீடு ஆகியவைகள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். உள்கட்டுமானத் துறையில் நவீனத்துவம், புதிய வகையிலான நிர்வாகம், நிதியுதவி உள்ளிட்டவற்றைச் செய்ய முடியும் என்றார் மோடி.

பிரேசில் அதிபருக்கு மோடி வாழ்த்து: பிரேசில் அதிபராக தில்மா ரூசோஃப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, இந்தச் சந்திப்பின்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து மோடி தெரிவித்ததாவது: பிரேசில் அதிபராக தில்மா ரூசோஃப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, “பிரிக்ஸ்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளின் தலைவர்களோடு சேர்ந்து நானும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசிலில் இருந்து பிரிஸ்பேன் வரை, உங்களது (ரூசோஃப்) தலைமையின்கீழ் “பிரிக்ஸ்’ அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்களது தொலைநோக்குத் திறன் கொண்ட தலைமையால், நமது அமைப்பு (பிரிக்ஸ் அமைப்பு) தொடர்ந்து பலனடையும் என்றார்.

உலக நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு: தனது ஆஸ்திரேலியப் பயணத்தின் தொடக்கத்தில், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஹெர்மன் வான் ராம்பூய், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரை மோடி சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹோலாந்த், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட், சவூதி அரேபிய இளவரசர் சல்மான் பின் அப்துல்லா அஜீஸ் அல் சௌத் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் ஆகியோருடனான சந்திப்பின்போது, அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவை வடிவமைத்து, இந்தியாவின் லக்னௌ நகரில் காலமான பிரபல கட்டுமான நிபுணர் வால்டர் பர்லி கிரிஃபின் வாழ்க்கை குறித்து மோடி பேசினார்.

பயங்கரவாதத்தை முறியடிக்க பொதுத் திட்டம்-மோடி: பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பின்போது, உலக பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு பொதுவான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பொதுத் திட்டம் உருவாக்கப்பட்டால், பயங்கரவாதத்தை எளிதில் முறியடித்து விட முடியும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச மோடி திட்டமிட்டுள்ளார்.

TAGS: