கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் செயலுக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்  செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் காவிரி நதி நீரை சுமார் 48 டிஎம்சி அளவுக்கு தேக்கி வைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகளை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேக்கேதாட்டு என்ற இடத்தில் சுமார் 2,500 ஏக்கர் வனப் பகுதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை கர்நாடக மாநில அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விவரம்: “மேக்கேதாட்டு என்ற இடத்தில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக சர்வதேச அளவிலான நிறுவனத்தைத் தேர்வு செய்ய கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

நடுவர் மன்றம் கட்டுப்பாடு: காவிரி நதியில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி அந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற அனுமதியுடன் காவிரி நடுவர்மன்றத்தில், சம்பந்தப்பட்ட தமிழக அரசும் கர்நாடக அரசும் இறுதித் தீர்ப்பு தொடர்பாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மேக்கேதாட்டு பகுதியில் நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்த உரிமை உள்ளதாகக் கூறி, காவிரி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாகவே மனு தாக்கல் செய்திருந்தது. இதை 2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள நடுவர்மன்றம், “காவிரி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் நீர்மின் திட்டங்கள் உருவாக்கப்படுமானால், அது காவிரியில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் திறந்துவிட உத்தரவிடப்படும் தண்ணீரின் அளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. ஒருவேளை புதிய திட்டங்கள் அமைக்கப்படுமானால், அது இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

உரிமை இல்லை: இந்த நிலையில், தேசிய நீர்மின் கழகத்துடன் சேர்ந்து திட்டத்தை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக காவரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்குகள் தற்போது நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் இருந்தாலும், அந்தத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தீர்ப்புக்கு சம்பந்தப்பட்ட தமிழகமும், கர்நாடகமும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

ஆனால், அதை மீறும் வகையில் அமைந்துள்ள கர்நாடக அரசின் செயல்பாடு, தமிழக நீர்ப்பாசனத் தேவை, விவசாய நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும். காவிரி நதியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி நீர்த்தேக்கம், பிலிகுண்டுலு ஆகியவற்றுக்கு இடையிலான நீர்வரத்து குறையும். ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் கர்நாடகம் காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டிய அளவில் கடுமையான விளைவுகளை இந்தத் தடுப்பணைகள் திட்டம் உருவாக்கும்.

காவிரி நதியில் புதிய திட்டங்களை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மட்டுமே உள்ளது.  ஆனால், அந்த அமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. இதேபோல, சம்பந்தப்பட்ட தமிழகத்தின் கருத்தை அறியாமல் தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. எனவே, காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதுவரை கர்நாடக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வித உத்தரவோ, அறிவுரையோ வழங்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு உரிய உத்தரவுகளை கர்நாடக அரசுக்குப் பிறப்பிக்க வேண்டும்’ என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. -http://www.dinamani.com

முல்லைப் பெரியாறு: மத்திய துணைக் குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர், கதவணைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.

மத்திய நீர்வள ஆணையச் செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹரீஷ் கிரீஷ் தலைமையிலான துணைக் குழுவினர், கடந்த 2 மாதங்களாக பெரியாறு அணையில், புள்ளிவிவர சேகரிப்புக் கருவியின் (டேட்டா கலெக்ஷன் மானிட்டர்) பதிவுகளையும், கேலரி பகுதியில் அணையின் நீர்க்கசிவு (அழுத்தத்தால் ஏற்படும் நிர்ணயிக்கப்பட்ட கசிவு நீர்) குறித்தும் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கண்காணிப்புக் குழுவிடம் வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமையும் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதிகளை ஆய்வு செய்து நீர்க்கசிவை கணக்கிட்டனர்.

கடந்த 3-ஆம் தேதி, மூவர் கண்காணிப்புக் குழுவினர் அணையில் ஆய்வு செய்தபோது, கேரள அரசுப் பிரதிநிதியான அந்த மாநில கூடுதல் தலைமைச் செயலர் குரியன், அணையின் 13 கதவணைகளில் 12, 7, 13 ஆகியவை இயங்கவில்லை என்றும், எனவே, அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது எனவும் கூறினார்.

அதையடுத்து, 7, 12-ஆவது கதவணைகள், மூவர் கண்காணிப்புக் குழுவின் முன்பாக பரிசோதிக்கப்பட்டன. அப்போது, இந்த இரண்டு கதவணைகளும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், 13-ஆவது கதவணையை இயக்குவதில் சிக்கல் இருந்தது.

இந்த 13-ஆவது கதவணையை, கடந்த 15 நாள்களாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் செப்பனிட்டு, புதிதாக சக்கரம் மாற்றி வைத்திருந்தனர். பின்னர், துணைக் குழுவினர் முன்னிலையில் இந்தக் கதவணை இயக்கி பரிசோதிக்கப்பட்டது. அப்போது, கதவணையை மேலே தூக்கி அணையிலிருந்து கேரளப் பகுதிக்கு உபரியாக 5 நிமிடம் தண்ணீர் திறந்து விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பின்னர், கேரளப் பிரதிநிதிகள் கூறியதும், மீண்டும் கதவணை இறக்கப்பட்டது.

13-ஆவது கதவணை நல்ல நிலையில் இருப்பதாக, துணைக் குழுத் தலைவர் தமிழக பொதுப் பணித் துறை பதிவேட்டில் எழுதி கையெழுத்திட்டார். இதற்கிடையே, மீண்டும் 12-ஆவது கதவணையையும் இயக்கிக் காட்ட வேண்டுமென கேரளப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அதற்கும் சம்மதம் தெரிவித்து, தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் 12-ஆவது கதவணையையும் திறந்து, 5 நிமிடம் கேரளப் பகுதிக்கு தண்ணீரை வெளியேற்றினர். பின்னர், மீண்டும் கதவணை இறக்கப்பட்டது.

கேரள அரசு கடந்த சனிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் அணையின் 13-ஆவது கதவணை பலமில்லை எனவும், அதை சரிசெய்யும் வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது எனவும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த நிலையில், கதவணையை இயக்கிப் பரிசோதித்து, நல்ல நிலையில் இருப்பதாக துணைக் குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அணைப் பகுதியில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜீத்குமார் பாட்டீல், அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால், வன விலங்குகள், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்தார்.

இதனால், துணைக் குழுவினர் குறித்த நேரத்தில் ஆய்வு செய்ய முடியாமல், 3 மணி நேரம் கழித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து, மூவர் கண்காணிப்புக் குழுவிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக, துணைக் குழுவின் தமிழகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.-http://www.dinamani.com

TAGS: