இலங்கை உதவியுடன் தமிழகத்தை வேவு பார்த்தேன்: பாகிஸ்தான் உளவாளி

pakistanஇலங்கை உதவியுடன் தமிழகத்தை உளவு பார்த்ததாகவும், இந்திய இறையாண்மை, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட்டதாகவும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேனை தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். மேலும் ஜாகீரின் கூட்டாளிகளான முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகிய 3 பேரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜாகீர்உசேன், சிவபாலன், முகமது சலீம் ஆகிய 3பேர் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடைபெற்றது. உளவாளிகள் 3 பேரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிபதி மோனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தமிழகத்தை உளவு பார்த்ததாக சந்தேகநபர்கள்; மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து நீதிபதி மோனி கேட்டார். அதற்கு ஜாகீர் உசேன், தம் மீது சாட்டப்பட்டு உள்ள குற்றத்தை ஒப்புக்கொள்வதாக நீதிபதி முன்னிலையில் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்ற ஷா மற்றும் மலேசியாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் முகமது சுலைமான், முஸ்லி ஆகியோரது வழிகாட்டுதலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் வகையில் 2 இலட்சத்து 53ஆயிரம் இந்திய ரூபாய் போலி நாணயத்தாள்களை தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் குற்றம் என்று தெரிந்தே அதனை செய்ததாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்திய இறையாண்மை மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் நீதிபதி முன்னிலையில் ஜாகீர் உசேன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இவர்கள் மீதான அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 3 பேரையும் பொலிஸார் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். -http://www.athirvu.com

TAGS: