எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது: பாகிஸ்தானுக்கு ஜேட்லி கண்டிப்பு

இந்தியாவின் எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பாஜக சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

எந்த விதமான வழிமுறையைப் பயன்படுத்தினாலும் தங்களால் இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிடிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் எல்லைகளை மாற்றும் காலம் மலையேறி விட்டது. இப்போது இந்தியாவின் எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது. ஜம்மு } காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்

கிணைந்த பகுதி என்பதை இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தில்லியில் இருந்து லாகூருக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுக்கு முன்முயற்சி எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவர் நட்புக்கரம் நீட்டினார். அவர் பாகிஸ்தானில் ஆற்றிய உரையில் “”வரலாற்றை மாற்ற முடியும். புவியியலை மாற்ற முடியாது. அண்டை நாடுகளை மாற்ற இயலாது. அவற்றுடனான உறவுகளை மாற்றியமைக்க முடியும்” என்று சுட்டிக் காட்டினார்.

இரு தரப்பு உறவுகள் மேம்பட வாஜ்பாய் நடவடிக்கை எடுத்ததைப் போல் பாகிஸ்தானும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். எந்தவொரு நாடும் தனது கொள்கையை அமல்படுத்த தீவிரவாதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்காது.

உலகில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழும் இந்தியா ராணுவ, பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. இங்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவர தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாது.

துப்பாக்கி ஏந்தியவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியாது. தவறாக வழிநடத்தப்பட்டு, தீவிரவாத இயக்கங்களில் இணைந்து, தற்போது தேசிய நீரோட்டத்தில் இணைய விரும்புபவர்கள், பிரிவினைப் பாதையைக் கைவிட்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும். அவர்களை வரவேற்போம். இந்த நோக்கத்தோடு பேச விரும்புபவர்களுடன் திறந்த மனதுடன் எங்கள் பேசுவோம். ஜம்மு-காஷ்மீரில் முழுமையான அமைதியை ஏற்படுத்துவதும், இந்த மாநில மக்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதுமே நோக்கம். தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றால் சாமானிய மனிதன்தான் அதிகம் பாதிக்கப்படுகிறான்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய நிலவரத்தால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதையே இங்கு நடைபெற்ற இரண்டு கட்டத் தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது காட்டுகிறது என்றார் ஜேட்லி. -http://www.dinamani.com

TAGS: