பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? மத்திய, மாநில அரசுகளிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய, மாநில அரசுகளிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாறில் சென்னை மாநகர அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற பி.அருண்குமார், பி.ராம்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

இவர்களின் உறவினர்கள் இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரணை செய்யும் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்தத் தீர்ப்பாயம் அருண்குமார் குடும்பத்தினருக்கு ரூ.9.25 லட்சமும், ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.11.34 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் இழப்பீடு கோரி இருவரின் உறவினர்கள் மான்விழி, பாலு உள்பட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

நமது நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், மற்றொரு நீரான மதுபானம் மூலை முடுக்கெல்லாம் பாய்கிறது. இதனால், பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன.

இவை சமுதாயத்தின் விஷமாகும். சமுதாயத்தில் நடைபெறும் பல தீமைகளுக்கு மதுபானமே அடிப்படைக் காரணமாக உள்ளது. இருந்த போதிலும், வருவாய் ஈட்டுவதற்காக அரசாங்கங்கள் மதுபானக் கடைகள், பார்களை திறந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 6,850 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம், ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்த வழக்கில், அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது எந்தத் தவறும் இல்லை என போக்குவரத்து கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்தான் அதிகமாக மது அருந்தியிருந்தனர். அதனால்தான் அவர்களால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

யார் மீது தவறு என்பது வழக்கின் இறுதியில் முடிவு செய்யப்படும். மது போதையில் வாகனம் ஓட்டியதால், விலை மதிப்பில்லாத இரண்டு உயிர் இறந்துள்ளன. ஆண்டு தோறும் மது போதையில் வாகனம் ஓட்டி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு மது போதையில் வாகனம் ஓட்டி 6,463 பேர் இறந்துள்ளனர். 20 ஆயிரத்து 81 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே மது போதைதான். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு 62 லட்சத்து 9 ஆயிரத்து 37 வாகனங்களாக இருந்த எண்ணிக்கை, 2014 ஜனவரி 1-ஆம் தேதி ஒரு கோடியே 8 லட்சத்து 86 ஆயிரத்து 774 -ஆக உயர்ந்துள்ளது.

மது போதையில் வாகன விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2002-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு ஜூன் வரை மது போதையில் வாகனம் ஓட்டியதாக 95,365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து 515 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டி நடைபெறும் விபத்துக்களில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். 5 கோடி பேர் படுகாயமடைகின்றனர்.

கேரள மாநிலத்தின் மது போதை கட்டுப்பாட்டுத்துறை மையம் நடத்திய ஆய்வில், 40 சதவீதம் சாலை விபத்துக்கள் மது போதையில் வாகனம் ஓட்டுவதால் நடைபெறுவதாகத் தெரிய வந்துள்ளது.

அதனால், இந்த வழக்கில் மத்திய அமைச்சகச் செயலர், தமிழக வருவாய் துறைச் செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், டி.ஜி.பி. ஆகியோரை எதிர் மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்துக் கொள்கிறேன்.

இவர்கள் அனைவரும், நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை விதித்திருக்கும் போது, அரசு மதுபானக் கடைகள், பார்கள் நடத்தலாமா?

மதுபானக் கடைகள் திறப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்திருந்தால், அது அரசியல் சட்டப் பிரிவு 21 (தனிநபர் வாழ்வுக்கு வழங்கும் பாதுகாப்பு மற்றும் தனி நபர் உரிமை), மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானது இல்லையா?

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது?, மது விலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தி, மது விற்பனை மூலம் கிடைத்த வருவாயை வேறு வழிகளில் உருவாக்க அரசு ஏன் முயற்சிக்கக் கூடாது? இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: