துவக்கினார் கருணாநிதி; அதிகப்படுத்தினார் ஜெயலலிதா : மதுபான விற்பனை குறித்து வைகோ பேச்சு

vaiko”தமிழகத்தில், மதுபானக் கடைகளை, கருணாநிதி தான் முதலில் துவக்கினார். அடுத்து முதல்வராக வந்த எம்.ஜி.ஆர்., தொடர்ந்து நடத்தினார். பின் வந்த ஜெயலலிதா, இலக்கு நிர்ணயித்து அதிகப்படுத்தினார்,” என, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, நேற்று, ம.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், வடசென்னை மாவட்ட ம.தி.மு.க., சார்பில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதில் கலந்து கொண்ட, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:

அமோகமாக நடக்கும் மதுபான விற்பனையால், ஏற்படும் உயிர் இழப்புகள், விபத்துகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கண்டித்திருக்கிறார். இதனால், மத்திய – மாநில அரசுகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கின்றனர். மதுவால், அரசுக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி வருமானம் வரலாம்; ஆனால், 30 லட்சம் பேர் பாதிக்கின்றனர்.

தமிழகத்தில் மக்கள் நலனுக்காக ராஜாஜி, காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோர், மதுபானக் கடையை திறக்கவில்லை.துவக்கியது கருணாநிதி தான். அதன் பின் வந்த, எம்.ஜி.ஆர்., தொடர்ந்து நடத்தினார். அடுத்து வந்த ஜெயலலிதா, ஆட்சியில் இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற்கின்றனர்.

இப்போது, புதிய முதல்வராக வந்திருக்கும் பன்னீர்செல்வம், துணிச்சலாக முடிவெடுத்து, மதுபானக் கடைகளை மூட வேண்டும்; கேரளாவை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.தமிழக அரசியலில், ம.தி.மு.க., நிலை குறித்து, வரும் 23ம் தேதி, முக்கிய முடிவு எடுக்கப் போகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

-http://www.dinamalar.com

TAGS: