ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதலில் ஒரே நாளில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்திய ராணுவத்தின் உயரதிகாரியான லெப்டினன்ட் கர்ணல் சங்கல்ப் குமார் உள்ளிட்ட 11 பாதுகாப்பு படையினர், இந்த தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
எனினும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆறு தீவிரவாதிகளும், பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அதைப்போல் இதே தாக்குதல் சம்பவங்களில் 10க்கும் அதிகமான பொது மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன.
அம்மாநிலத்தில் உள்ள உரி பகுதிக்கு அருகில் உள்ள மொகுரா என்கிற இடத்தில் இன்று விடியற்காலையில் தாக்குதல் சம்பவங்கள் தொடங்கின, தொடர்ந்து ஸ்ரீநகர் பகுதிக்கு அருகில் உள்ள சௌரா என்கிற இடத்திலும், மூன்றாவதாக ஷோபியன் காவல் நிலையத்திலும் அதன் பின்னர் புல்வாமா பகுதியில் அமைந்துள்ள திரால் பேருந்து நிலையத்திலும் இந்த தாக்குதல் சம்பவவங்கள் நடந்தன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது, வரும் 9 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள், அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தலை தடுத்து நிறுத்த தான் என்றும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
நடைபெற்று முடிந்த இரண்டு கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவிலும் வாக்களித்தோரின் சகவிகிதம் அதிகரித்து காணப்படுவதால், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்த்த் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தாக்குதல் சம்பவம் தொடங்கிய உரி பகுதியில் வரும் திங்களன்று தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போதும் இந்த திட்டத்தில் மாற்றம் இருக்காது என்று பிரதமர் அலுவலக வட்டார செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி அவரது அதிகாரபூர்வ சமுக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
அம்மாநிலத்தில் தற்போது நிலவும் நம்பிக்கையையும், அமைதியையும் சீர்குலைக்கும் முயற்சி இது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் நலனுக்காகவும், பாதுக்காப்புக்காகவும் உயிரிழந்துள்ள வீரர்களை நாடு என்றென்றும் நினைவில் கொள்ளும் என்றும் கூறி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா இது தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடைபெற்ற நான்கு தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு ஊடுருவலை கட்டுப்படுத்தும் பகுதிகளில் காணப்படும் குறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் களைய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன. -BBC