இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் உதவ வேண்டும்

terroristலாகூர்: இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் உதவ வேண்டும். அதேபோல், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் லாகூரில் ஆவேசமாக பேசினார். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த 2011ம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 166 பேர் பரிதாபமாக பலியானார்கள். இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், இதுவரை பாகிஸ்தான் அதற்கு செவிசாய்க்கவில்லை. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பா இயக்கத்தில் இருந்து பிரிந்து, ஜமாத் உத் தவா எனும் தீவிரவாத இயக்கத்தை ஹபீஸ் சயீத் நடத்தி வருகிறார். அத்துடன் பாகிஸ்தானில் சுதந்திரமாகவும் செயல்பட்டு வருகிறார்.அவரது தீவிரவாத இயக்க மாநாடு கடந்த 2 நாட்களாக லாகூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஏராளமான தீவிரவாத இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு பாகிஸ்தான் அரசு 2 சிறப்பு ரயில்களை அனுமதித்தது.

இம்மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஹபீஸ் சயீத் பேசியதாவது: இந்தியாவில் இருந்து காஷ்மீர் மாநிலம் சுதந்திரம் பெறுவதற்கு பாகிஸ்தான் அரசுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒவ்வொரு முஜாகிதீன்களும் உதவ முன்வர வேண்டும். காஷ்மீர் சுதந்திரம் பெறுவதை ஒவ்வொரு பாகிஸ்தானியரும் இதை தனது கடமையாக எண்ணி, இந்த அழைப்பை ஏற்க முன்வர வேண்டும். அதேபோல், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பிடியிலிருந்து பாகிஸ்தான் அரசு மீண்டுவர வேண்டும். நமக்கு உதவுவதற்கு ஏராளமான முஸ்லிம் நாடுகள் தயாராக உள்ளன என்று ஹபீஸ் சயீத் ஆவேசமாக பேசினார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ஹபீஸ் சயீத், அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரது தலைக்கு அமெரிக்க அரசு ரூ.61 கோடி விலை வைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

-http://www.dinakaran.com

TAGS: