தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழையாமல் இருக்க எச்சரிக்கின்ற கைத்தொலைபேசி செயலி ஒன்றை தூத்துக்குடி பொறியாளர் ரெசிங்டன் உருவாக்கியுள்ளார்.
ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய ‘சேவ் அவர் ரேஸ்’ சுருக்கமாக ‘எஸ் ஓ ஆர்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை இணையத் தொடர்பு இல்லாமலும், கைத்தொலைபேசி சிக்னல் இல்லாமலும்கூட பயன்படுத்திட முடியும்.
தமிழக மீனவர்களின் மனதில்கொண்டு தமிழிலேயே இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
படகு ஒன்று சர்வதேச கடல் எல்லையை நெருங்கும்போதே இந்த செயலி எச்சரிக்கை ஒலியெழுப்பும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிவிட்டால், எச்சரிக்கை படம் திரையில் தோன்றுவதோடு, வெளியேறு என்ற எச்சரிக்கை வார்த்தைகளையும் இந்த செயலி எழுப்பும் என இந்த செயலியை உருவாக்கிய ரெசிங்டன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆபத்து என்ற சமயத்தில் மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபயக் குரலாக குறுந்தகவல் அனுப்புவதற்கான வசதியும் இந்தச் செயலியில் உள்ளது.
இந்த புதிய செயலியின் சிறப்பம்சங்கள் குறித்து அதனை உருவாக்கியுள்ள பொறியாளர் ரெசிங்டன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம். -BBC