ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் வசிக்கும் தமிழர்களுக்கு கர்நாடக வனத்துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் கர்நாடக மாநில எல்லையில் மாறுகொட்டாய், தேங்காகொம்பு, புங்கொம்பு, ஆத்தூர், கோட்டையூர், ஆலம்பாடி, அப்புகாம்பட்டி, ஜம்புருட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 2000 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல் ஆகியவைதான் இவர்கள் பிரதான தொழில்.
இங்குள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியை கர்நாடக வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இப்பகுதியில் காவிரி வனவிலங்குகள் சரணாலயம் அமைப்பது குறித்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகுகடந்த 4 மாதங்களுக்கு முன்புவரை அந்தத் திட்டம் பற்றி பேச்சே இல்லை. ஆனால் தற்போது சரணாலயம் தொடர்பான பிரச்சனை எழுப்பியும் சரணலாயத்திற்கான பகுதியை கையகப்படுத்தும் பணிகளில் இறங்கியும் உள்ளது. சரணாலயம் அமைப்பதற்காக வனத்துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இங்குள்ள தமிழர்களை வெளியேற்ற நெருக்கடி வலுத்து வருகிறது.
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மூன்று தலைமுறையைக் கடந்து தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். மேலும் மேட்டூர் அணை அமைக்கும்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்போதும் சில குடும்பங்கள் அந்தப் பகுதியில் குடியமர்த்தப்பட்டன.
அங்கு வசிப்பவர்களில் சிலருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படவில்லை; மின் இணைப்பும் கொடுக்கப்படவில்லை; பள்ளிக்கூடம், சுகாதார வசதிகளும் இல்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் பரிசலில் ஆற்றைக் கடந்து ஒகேனக்கல் சென்றுதான் படித்து வருகிறார்கள்.
இப்படிபட்ட நிலையில் அவர்களை வெளியேறுமாறு கர்நாடகா அரசு வனத்துறை மூலம் பல்வேறு விதமான நெருக்கடிகள் கொடுத்து வருகிறது. உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு வாழும் தமிழர்களால் வனத்துறைக்கோ, சுற்றுச் சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம்; தமிழக எல்லையை வரையறுக்க வேண்டும்” என்று அக்கிரமமாக கருத்து தெரிவித்திருக்கிறார். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து காவிரிக் கரையில் மூன்று தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தரவேண்டும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
09.12.2014 மறுமலர்ச்சி தி.மு.க