பதிவு செய்யப்படாத டாக்ஸி சேவைகளை தடை செய்ய இந்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

taxi_india
நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார்கள் சேவையைத் தடை செய்ய மத்திய அரசு அறிவுரை

 

இந்தியத் தலைநகர் டில்லியில் ‘உபர்’ டாக்ஸி ஓட்டுநர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அடுத்து, நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார் சேவைகளைத் தடை செய்யுமாறு இந்திய உள்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கைத்தொலைபேசியில் உள்ள செயலியின் மூலம் டாக்ஸி ஒன்றை வரவழைத்து, உணவகம் ஒன்றிலிருந்து தனது வீட்டுக்கு பயணம் செய்திருக்கிறார்.

டில்லி போலிசார் இந்த டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உபர் நிறுவன அதிகாரிகளை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையே, மும்பை மாநகரிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை காவல்துறை ஆணையாளர் ராகேஷ் மரியா இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்நகரில் உள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்களின் பின்புலங்கள் குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாலியல் வல்லுறவு தொடர்பான சர்ச்சைகள் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

டில்லியில் தற்போது மேலும் பல வாடகை வாகன சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஏற்க முடியாதது என்று மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல்த்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். ஓடும் பேருந்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றால் அதற்காக பேருந்து சேவைக்கு முழுமையான தடை விதிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், வாடகை வாகன சேவைக்கு தடை விதிப்பதும் இது போன்றது தான் என்று குறிப்பிட்டார். இதனால் பொது மக்களுக்கு தேவையில்லாத சிரமம் விளையக்கூடும் என்றும், அதனால் இது போன்ற தடைகள் விதிப்பதற்கு பதிலாக பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றார் .

டில்லி வடக்கு காவல்துறை ஆணையாளர் மதுர் வெர்மா இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பில் ‘உபர்’ நிறுவனத்திற்கு எதிராகவும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக சட்டவிதி மீறல் மற்றும் மோசடி செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள், முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதே பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பில் தேசிய மகளிர் வாரியமும் டில்லி காவல்துறைக்கு, 15 நாட்களுக்குள் பதிலளிக்க கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையையும் சேர்த்து வழங்க அதில் கோரப்பட்டுள்ளது.

டில்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இந்திய நாடாளுமன்ற வளகாத்தில் சந்தித்து இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை விவரித்து கூறினார்கள். -BBC

தமிழகத்தில் வாடகை டாக்ஸிகள் பாதுகாப்பானவையா?

taxi
உபர் கார் சம்பவம் வாடகை வாகன பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

‘உபர்’ டாக்ஸி சம்பவத்தையடுத்து, நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார் சேவைகளைத் தடை செய்யுமாறு இந்திய உள்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தில் இயங்கிவரும் வாடகைக் கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாடகைக் கார் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த வாடகைக் கார் நிறுவனங்கள் அனைத்துமே, சொந்தமாக கார் வைத்திருக்கும் தனி நபரைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிரித்து அனுப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.

என்டிஎல், ஃபாஸ்ட்ராக் போன்ற நிறுவனங்கள், இந்த கார்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொறுத்துவதை கட்டாயமாக்கியிருக்கின்றன. சில நிறுவனங்கள் ஆபத்துக் காலத்தில் அழைப்பதற்கென எண்களை மட்டும் அளிக்கின்றன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தங்கள் வாகனங்களில் ஆபத்துக் காலத்தில் அழுத்துவதற்கான பொத்தான்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக பல மாவட்டங்களில் இயங்கிவரும் என்டிஎல் நிறுவனத்தின் இயக்குனர் எம்.சி. பரத்குமார் தெரிவித்தார்.

மொபைல் ஆப் சேவைகள் பாதுகாப்பானவையா?

இம்மாதிரி வாடகைக்கார் நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வாடகைக்கு பிடித்து அலுவலகம் சென்றுவரும் தகவல்தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவரிடம் இம்மாதிரி கார்களில் இருக்கும் பாதுகாப்புக் குறித்துக் கேட்டபோது, ஒவ்வொரு ஓட்டுனரும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வது தனக்கு அச்சத்தைத் தந்ததாகவும், ஆனால், யாரும் இதுவரை மோசமாக நடந்துகொண்டதில்லை என்று தெரிவித்தார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமானால், மொபைல் ஆப்ளிகேஷன்கள் மூலம் இயங்கும் சேவைகளைத் தடைசெய்ய வேண்டுமென்கிறார் பரத்குமார்.

காரணம், இம்மாதிரி சேவைகளில் அந்தக் கார்கள் மொபைல் போன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், அது பாதுகாப்பற்றது என்றும் தெரிவிக்கிறார் பரத்.

தில்லியில் நடந்திருக்கும் இந்த பாலியல் பலாத்கார சம்பவம், தமிழகத்தில் இம்மாதிரி வாடகை வாகனங்களைப் பயன்படுத்துபவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், கால் டாக்ஸி நிறுவனங்கள் எல்லாக் கார்களிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

மொபைல் ஆப் மூலம் இயங்கும் ஊபர் போன்ற நிறுவனங்கள் சென்னையிலும் இயங்கிவரும் நிலையில், தமிழக காவல்துறை இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. -BBC

TAGS: