காஷ்மீர் தேர்தல்- உற்சாகம் நீடிக்கிறது

kashmir01
குளிரைப் பொருட்படுத்தாது பலர் வந்து வாக்களித்தனர்

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் 58 சதவிகித வாக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 61 சகவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்காப்பு அச்சுறுத்தல்கள் உள்ள பகுதிகளாக கருதப்படும் இந்த மாநிலங்களில் தொடக்கம் முதலே வாக்களார்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெறும் இந்த வாக்குப்பதிவுகளில், முதல் இரண்டு கட்டங்களில் கூட இந்த இரண்டு மாநிலங்களிலும் முன்பை விட அதிகமாக வாக்கு பதிவாகியிருந்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூன்று அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அதே மாநிலத்தில் ஒரு வாக்குப்பதிவு மையம் அருகே, சிறிய பெட்ரோல் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்த சம்பவம் தவிர பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

தாக்குதல்

குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே பொது மக்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்தார்கள். சென்ற வாரம் அம்மாநிலத்தில் தீவிரவாதிகளால் நடைபெற்ற பலதரப்பட்ட தாக்குதலில் ஒரே நாளில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள்.

kashmir02
கடந்த வாரம் ஒரே நாளில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

 

இது தேர்தலை சீர்குலைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரசியல் தலைவர்களும், வாக்காளர்களை ஊக்கப்படுத்தினார்கள். அதிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் விவகாரம் குறித்து குறிப்பிடுகையில், துப்பாக்கி குண்டுகளை விட வாக்குச்சீட்டுகள் வலிமையானவை என்பதை நாட்டுக்கு மக்கள் உணர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்திலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், அம்மாநிலத்தின் கிரிதிஹ் மாவட்டத்தில் மட்டும் நக்சல் தாக்குதல்களால் கடுமையான துப்பாக்கி சுடு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. மத்திய காவல் படையினர் ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். -BBC

TAGS: