கவுரவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! : திருமாவளவன்

Thirumaதமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுதுள்ள அறிக்கை:

’’சாதி கவுரவம் என்னும் பெயரில் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாகப் படுகொலை செய்யும் அவலம் இந்தியா முழுவதும் தலைவரித்தாடுகிறது.  பாலூட்டி சீராட்டி வளர்த்த மகளையே ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யும் அளவுக்கு சாதிவெறி பெற்றோரை ஆட்டிவைக்கிறது.

சாதிவிட்டுச் சாதி காதலித்தாலோ திருமணம் செய்துகொண்டாலோ தம்முடைய குடும்பத்திற்கும் சாதிக்கும் பேரிழுக்கு என்று கருதும் அளவுக்கு சாதி என்பது சமூகத்தில் ஒரு மனநோயாக விளங்குகிறது.  இது நீண்ட நெடுங்காலமாக இந்திய மண்ணில் தொடரும் பேரவலமாகும். அண்மைக் காலமாக இத்தகைய சாதி கவுரவப் படுகொலைகள் கல்வி பெற்ற குடும்பத்தினரிடையேயும் அதிகரித்துள்ளது.  காட்டுமிராண்டித்தனமான இத்தகைய போக்குகளை இந்தச் சாதியச் சமூகம் அங்கீகரித்ததோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தவும் செய்கிறது.  காவல்துறையினர் இத்தகைய படுகொலைகளைத் தடுக்கவோ தண்டிக்கவோ பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனை மூடி மறைக்கவே ஒத்துழைப்பு தருகின்றனர்.

இந்நிலையில், சாதி கவுரவம் என்னும் வறட்டு கவுரவத்தின் பெயரில் நடக்கும் இத்தகைய கொடூரமான போக்குகளை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.  இதன் விளைவாக, மைய அரசு இப்படுகொலைகளைத் தடுப்பதற்கென சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு வரைவு மசோதா ஒன்றை அனுப்பியுள்ளது.

இம்மசோதா அனுப்பப் பெற்று பல மாதங்களைக் கடந்த நிலையிலும் தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து எத்தகைய கருத்தும் மைய அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது.  அதாவது, இம்மசோதாவைச் சட்டமாக்குவதற்கு தமிழக அரசு தமது ஒப்புதலை இன்னும் அளிக்கவில்லை.

தமிழக அரசின் இத்தகைய மெத்தனப்போக்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. உடனடியாக, இம்மசோதாவை சட்டமாக்குவதற்குரிய ஒப்புதலை அளிப்பதுடன் இன்னும் அச்சட்டத்தை வலுவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.  அத்துடன், தமிழகத்தில் நடைபெறும் சாதி கவுரவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசும் தனிப்பட்ட முறையில் தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  ’

வடமாநிலங்களில் நடப்பதைப் போல தமிழகத்திலும் சாதி கவுரவப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன.  இவை பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. பொதுமக்களின் முன்னிலையிலேயே அல்லது அவர்களுக்குத் தெரிந்தே சாதிவிட்டுச் சாதி காதலிக்கும் அல்லது திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை உயிரோடு கொளுத்தியோ, நஞ்சு கொடுத்தோ அல்லது கொடூரமாக வெட்டியோ படுகொலை செய்யும் இழிசெயல்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்திலும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன என்பது மிகப்பெரும் வெட்கக்கேடாகும்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரையும் ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையிலேயே நஞ்சு கொடுத்துப் படுகொலை செய்தனர்.  அண்மையில், தருமபுரி இளவரசன், உசிலம்பட்டி விமலாதேவி, பழனி முத்துக்குமார் ஆகியோர் சாதி கவுரவம் என்னும் பெயரில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.  இவை வெளிச்சத்துக்கு வந்த கொடுமைகளாகும். வெளிவராதவை கணக்கிலடங்காதவை.’

தந்தை பெரியாரின் பெயரில் கடந்த 40 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகள் இந்த அவலத்தைப் போக்குவதற்கு இதுவரையில் எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.  எனவே, மைய அரசு இதற்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையும் தமிழக அரசும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்பதோடு மாநில அளவில் தனிச் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

-http://www.nakkheeran.in

TAGS: