இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவை ஆதரிக்கும் பிரபலமான டுவிட்டர் கணக்கை பெங்களூர் நகரத்தைச் சேர்ந்தவர் நடத்திவந்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்திய காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான தமது புலனாய்வைத் துவக்கியிருக்கிறார்கள்.
ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனலான சேனல் 4 தொலைக்காட்சி தனது புலனாய்வு மூலம் கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த நபரை மெஹ்தி என்கிற பெயரிட்டு அழைத்திருந்த அந்த சேனல்-4 தொலைக்காட்சி, அவரது முழுமையான அடையாளத்தை வெளியிட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது முழுமையான அடையாளத்தை தாம் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தது.
பெங்களூர் பெருவர்த்தக நிறுவன நிர்வாகி
இந்திய பெருவர்த்தக நிறுவனக் குழுமம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஷாமி விட்னஸ் என்கிற டுவிட்டர் கணக்கானது இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பு குறித்த தகவல்களை தொடர்ந்து கொடுத்ததுடன் அதனுடைய வளர்ச்சியை பெரிதும் கொண்டாடி வந்தது. இஸ்லாமிய அரசு அமைப்பு குறித்து ஆங்கில மொழியில் கிடைத்துவந்த தகவல்களுக்கான முக்கிய தளமாகவும் இந்த டுவிட்டர் கணக்கு செயற்பட்டு வந்தது.
பிரிட்டன் தொலைக்காட்சியின் இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து தாம் விசாரணையை துவக்கியிருப்பதாக பெங்களூரு நகர காவல்துறைத்தலைவர் எம் என் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூரு நகர காவல்துறையும் கர்நாடக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புக்கான பிரிவும் புலனாய்வை துவக்கியுள்ளதாகவும், இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவும் இது தொடர்பில் பெங்களூரு காவல்துறையிடம் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“சமூகவலைத்தளங்களை பெங்களூர் காவல்துறை கண்காணிப்பதில்லை”
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பெங்களூரு காவல்துறை இதுவரை பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை; கண்காணிக்கவில்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ரெட்ட்டி, ஆனால் தற்போது சமூக வளைத்தள கண்காணிப்புக்குழு ஒன்றை தாம் அமைத்திருப்பதாக கூறினார்.
இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை இயக்குபவர் இந்தியாவின் பெருவர்த்தக நிறுவனக்குழுமத்தில் வேலைபார்ப்பதாகவும், சேனல் 4 தொலைக்காட்சியிலிருந்து அவரை தொடர்புகொண்டபிறகு அவர் தனது இந்த டுவிட்டர் கணக்கை நிறுத்திவைத்திருப்பதாகவும் சேனல் 4 செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு இந்த குறிப்பிட்ட நபர் யார் என்பதை அடையாளம் காண்பது கடினம் என்று தெரிவித்த பெங்களூரு காவல்துறைத் தலைவர், இது குறித்த விவரங்களை இதற்கு மேலதிகமாக பொதுவெளியில் விவாதிப்பது தமது புலனாய்வுக்கு நன்மை பயக்காது என்றும் கூறினார்.
சமூக வலைத்தளக் கணக்கை யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் துவக்க முடியும் என்று பிபிசியிடம் கூறிய ரெட்டி, குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட இடத்திலிருக்கிறார் என்பதையெல்லாம் துல்லியமாக கண்டுபிடிப்பது சிரமம் என்று விளக்கமளித்தார்.
பெங்களூரு காவல்துறை அதிகாரிகளின் டுவிட்டர் கணக்குகளுக்கு பொதுமக்கள் தமது புகார்களை அனுப்பலாம் என்று பெங்களூரு காவல்துறை அறிவித்திருக்கும் பின்னணியில் ரெட்டியின் இன்றைய இந்த விளக்கம் வந்திருக்கிறது.
கடந்த இரண்டு மாதகாலத்தில் இப்படி கிடைக்கப்பெற்ற புகார்கள் மற்றும் துப்புக்களைக் கொண்டு சிலபல வழக்குகளை தாங்கள் புலனாய்ந்து கண்டுபிடித்ததாகவும் பெங்களூரு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. -BBC
கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தாழ்ந்த ஜாதியினரையும் மோடி சர்கார் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டா.