தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படுவதைப்போல வயதான முதியவர்கள் பஞ்சுப்பால் ஊற்றி பலவந்தமாக கொல்லப்படும் போக்கு பலகாலமாக தமிழ்நாட்டில் நிலவிவருகிறது என்கிறார் 92 வயதான முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன்.
நீண்டநாட்கள் படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களுக்கு பஞ்சில் நனைத்தோ, பாலாடை மூலமாகவோ அல்லது தேக்கரண்டி கொண்டோ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பால் ஊற்றும் நடைமுறை வெளிப்பார்வைக்கு அன்பான மரபுவழிச் சடங்காக தெரிந்தாலும் அதன் அடிப்படை நோக்கம் அந்த வயதானவரை சீக்கிரம் மரணிக்கச் செய்வதே என்கிறார் கி ரா.
இப்படி ஊற்றப்படும் பால் அந்த முதியவருக்கு கபத்தை அதிகப்படுத்தி மூச்சுத்திணறி இறக்கச் செய்யும் அல்லது அவருடைய நுரையீரலுக்குள் சென்று அதன் விளைவாக அவரது மரணத்தை வேகப்படுத்தும் என்கிறார் கி ரா. அந்தப்பால் ஊற்றப்படுவதன் நோக்கமும் அதுவே என்கிறார் அவர்.
வெறும் பஞ்சுப்பால் மட்டுமல்ல, முதியவர்களின் உயிரை உடனடியாக பறிப்பதற்கு இன்றளவும் ஏராளமான நடைமுறைகள் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன. நாணயத்தை பானை ஓட்டில் தேய்ந்து ஊற்றுவது, தங்கத்தை பானை ஓட்டில் அல்லது கல்லில் தேய்த்து அதைக்கழுவி அந்த தண்ணீரை ஊற்றுவது, வீட்டு மண் அல்லது வயல் மண்ணை கரைத்து வாயில் ஊற்றுவது என்கிற பழக்கங்கள் எல்லாமே படுக்கையில் இருக்கும் முதியவரை வேகமாக இறக்கச் செய்வதற்கான செயல்களே என்கிறார் கி ரா.
தலைக்கூத்தல்: ஊரும் உறவும் கூடிச் செய்யும் முதியோர் கொலை
இப்படியான நடைமுறைகளில் தலைக்கூத்தல் என்கிற நடைமுறை இன்றும் பரவலாக தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. அது முன்பு குளிப்பாட்டி படுக்க வைத்தல் என்கிற பெயரில் கரிசல்காட்டுப்பகுதியில் கடைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் கிரா. அந்த நடைமுறைகளை நேரில் கண்டவர் அவர்.
அதன்படி, கரிசல்காட்டுப்பகுதியில் நீண்டநாட்களாக ஒரு முதியவர் படுத்த படுக்கையாக இருந்தால் அவரது வீட்டுக்கு அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் தத்தம் அளவில் பல குடங்களை சேகரிக்கத்துவங்குவார்கள். சுமார் நூறு குடங்கள் வரை இப்படி சேகரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த குடங்கள் அனைத்தும் இந்த முதியவர் வீட்டு முற்றத்திள் கொண்டுவந்து வைக்கப்பட்டு அந்த குடங்கள் அனைத்திலும் நீர் நிரப்பப்படும்.
அந்த குறிப்பிட்ட நாளில் அந்த முதியவர் அவர் படுத்திருக்கும் கட்டிலோடு வீட்டில் இருந்து வெளியில் முற்றத்திற்கு கொண்டுவரப்படுவார். அவர் தலைமுதல் பாதம்வரை உடல் முழுக்க அடர்த்தியாக விளக்கெண்ணெய் அழுத்தித்தடவப்படும். அடுத்து அந்த முதியவரை ஒருவர் அந்த கட்டிலில் உட்கார்ந்த நிலையில் பிடித்துக்கொள்ள கூடியிருக்கும் ஆட்கள் அந்த குடங்களில் இருக்கும் தண்ணீரை மளமளவென முதியவர் தலையில் கொட்டுவார்கள். ஒரு அருவி போல தொடர்ச்சியாக கொட்டப்படும் இந்த குளிர்ந்த தண்ணீரில் அந்த முதியவர் மூச்சுத்திணறி இறக்கும் சம்பவங்கள் நடக்கும். ஒருவேளை அதற்கும் தப்பிப் பிழைப்பவர்கள், விளக்கெண்ணெய் மற்றும் குளிர்நீர் குளியலால் வரும் ஜன்னிக்காய்ச்சலுக்கு பலியாவார்கள் என்கிறார் கிரா. இப்படியான மரணங்களை கலியாண சாவு என்று அழைப்பதுடன், இந்த மரணத்துக்காக யாரும் அழக்கூடாது என்று சொல்வதும், இறுதி ஊர்வலத்தை வெகு விமரிசையாக செய்வதும் கரிசல் காட்டில் வழமை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நடைமுறை ஏதோ தண்ணீரில்லாமல் காய்ந்த பூமியான கரிசல் காட்டில் மட்டுமல்ல, கடலைப்போல ஏரியைக்கொண்ட கடலூர் பகுதியில் இன்றுவரையிலும் கடைபிடிக்கப்படுவதாக சொல்கிறார் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ஜே ஆர் சிவராமகிருஷ்ணன்.
கடலூர் பகுதியில் இந்த நடைமுறை தலைக்கூத்தல் என்கிற பெயரில் நடப்பதாக கூறுகிறார் சிவராமகிருஷ்ணன். பொதுவாக நீண்டநாட்களாக படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள் அமாவாசையன்று இறந்துவிடுவார்கள் என்று கிராமங்களில் நம்பிக்கை நிலவுவதாக தெரிவிக்கும் சிவராமகிருஷ்ணன், அமாவாசையன்று இறக்காத முதியவர்களுக்கு அடுத்த சிலநாட்களில் இந்த தலைக்கூத்தல் சடங்கு நடத்தப்படும் என்கிறார்.
இப்படியான நடைமுறையை சம்பந்தப்பட்டவரின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊரும் உறவும் கூடிப்பேசி திட்டமிட்டே செய்வதாக சொல்கிறார் சிவராமகிருஷ்ணன். குறைந்தது 50 பேராவது கூடிப்பேசி முடிவெடுத்த பிறகு எல்லோரும் அந்த வீட்டில் குழுமி இந்த தலைக்கூத்தலை நடத்துவார்கள் என்கிறார் அவர்.
படுத்தபடுக்கையாக இருக்கும் முதியவரின் தலையிலும் உடலிலும் விளக்கெண்ணெயை நன்கு தடவி ஊறவைத்து பச்சைத்தண்ணீரில் குளிக்கச் செய்து, குளித்து முடித்ததும் இளநீரை அவருக்கு குடிக்கச் செய்வார்கள். இப்படிச் செய்தால் இரண்டு மணிகளில் அவருக்கு ஜன்னி வந்து இறந்துவிடுவார் என்று தெரிவிக்கும் சிவராமகிருஷ்ணன், இதில் இந்த எண்ணெய்க்குளியலை அந்த முதியவரின் மனைவி, அல்லது படுக்கையில் இருப்பது மூதாட்டியாக இருந்தால் அவரது கணவர் வீட்டுப்பெண்கள் நடத்துவது மரபு என்கிறார்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வுமே அந்த நோய்வாய்ப்பட்ட முதியவரின் உடலை விட்டு நீங்க மறுக்கும் அவரது ஆன்மாவுக்கான விடுதலை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறதே தவிர, அது ஒரு உயிர்க்கொலையாக பார்க்கப்படுவதில்லை என்று கூறும் சிவராமகிருஷ்ணன், இன்றளவும் இந்த நடைமுறை நீடிக்கவே செய்கிறது என்கிறார்.
இவர் சொல்வது போன்ற இரண்டு சம்பவங்களை தன் சொந்தவாழ்வில் பார்த்ததாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரதிபா. இவரது தாய்வழிப்பாட்டிக்கு தலைக்கூத்தல் நடந்த பிறகே அவர் உயிர் பிரிந்தது. தந்தை வழிப்பாட்டியின் மரணத்தை எதிர்பார்த்து அவரது பிள்ளைகள் மற்றும் பேரன்கள் எல்லோரும் குடும்ப சகிதமாக கிராமத்துக்குப் போய் காத்திருந்த போதும் அவர் உயிர் பிரியாத நிலையில் அவரது உயிர் பிரியவேண்டும் என்பதற்காக பஞ்சுப்பால் ஊற்றியது முதல் இறப்புக்கான சிறப்பு பிரார்த்தனை வரை பலதும் செய்து, கடைசியில் கோவில் மண்ணை கரைத்து ஊற்றுவதற்காக அந்த குறிப்பிட்ட கோவில் மண்ணை எடுத்துவரப்போன பிறகு தான் அவரது மரணம் நடந்ததாக கூறினார் பிரதிபா.
பிரதிபாவின் பாட்டிகளுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. தமிழ்நாட்டின் பல பாட்டிகள் மற்றும் தாத்தாக்களுக்கும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. வெளியில் தெரியாமலே….. -BBC
பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்
கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி.
“100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?”
மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.
இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்லப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.
தற்கொலைத்தூண்டுதல் தவறினால் முதியோர் இல்லம்
மேலும் எல்லா வீட்டில் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.
ஆனால் முதியோர் இல்லங்களின் பராமரிப்பு சூழலோ அப்படி ஒன்றும் நல்லபடியாக இல்லை. குறிப்பாக இலவச முதியோர் இல்லங்களின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. கவுரவமான சிறைக்கூடம் என்று வர்ணிக்கும் அளவுக்குத்தான் சில முதியோர் இல்லங்களின் இருப்பு இருக்கிறது.
இப்படியான முதியோர் இல்லம் தேடிச்செல்ல விரும்பாத அல்லது முடியாதவர்கள் அல்லது முதியோர் இல்லத்தில் இடம் கிடைக்காதவர்கள் தமது பிள்ளைகளுடன் தொடர்ந்து இருக்க நேரும்போது செய்யவேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் ஏராளம். குறைந்தபட்சத் தேவையான மூன்றுவேளை சாப்பாட்டு கூட பல முதியவர்களுக்கு ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.
முதியோர் அனைவருக்கும் நிதியுதவி அளிக்க முடியுமா?
இப்படியாக, 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சமூக அவலமாக மாறிக்கொண்டிருக்கும் முதியோர் பராமரிப்புக்கு பின்னால் வலுவான பொருளாதார காரணிகளும் இருக்கின்றன.
உதாரணமாக தமிழக அரசு மாதந்தோரும் ஏழை முதியோர் பராமரிப்புக்காக ஆளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருகிறது. இந்த உதவித்தொகையை தமிழ்நாட்டின் 75 லட்சம் முதியவர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை எழுப்புகிறார்கள். ஆனால் அப்படி செய்யவேண்டுமானால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதியில் 10 சதவீதம் அதற்கு மட்டுமே செலவாகும். அவ்வளவு நிதிவசதி தமிழக அரசிடம் இல்லை. விளைவு பல முதியோர்களுக்கு இந்த நிதிஉதவி கிடைக்கவில்லை.
அதேபோல முதியோருக்குத் தேவைப்படும் சிறப்பு மருத்துவ வசதிகளும் தமிழ்நாட்டில் போதுமானதாக இல்லை. இருப்பவையும் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கின்றன. கிராமப்புற முதியவர்கள் தான் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் முதுமை என்னும் பெருஞ்சுமை
இதில் கூடுதலான கவலை தரும் அம்சம் என்னவென்றால், ஆதரவு தேவைப்படும் முதியோரில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம். இத்தகைய வயதான மூதாட்டிகள் பலருக்கு ஓய்வூதியமும் இல்லாமல், உடல் நலமும் குறைந்த நிலையில் தனிமை சூழ் முதுமை பெரும் பாரமாக இருந்து அவர்களை அழுத்துகிறது.
முதுமை, தனிமை, இயலாமை, வறுமை என தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பில் நிலவும் வெறுமையும் விரக்தியும் சூழ்ந்த அந்திமவாழ்வின் அவலங்களை அலசும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்துப்பேசும் பெட்டகத்தொடர் பிபிசி தமிழோசையில் ஞாயிறுதோறும் இடம்பெறும். -BBC
இப்படி வயதானவர்கள் கொல்லப்படுவதை ஒரு வழக்கத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள். இன்று இதனைச் செய்கின்ற இளைஞன் நாளை தனக்கும் இந்தச் சாவு தான் என்று தெரிந்த வைத்திருக்கிறான். எலாவற்றுக்கும் வறுமையே அடிப்படை. பணம் இல்லையேல் அப்புறம் என்ன பிணம் தானே!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ….
பாடம் மறந்து போய் ……பேய் களாகும் மாந்தர் ….
நம்மவர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா? தமிழ் நாட்டில் நடக்கும் அநியாயங்களை பார்த்தால் அது உண்மையாகத்தான் இருக்கும். நாம் யாவரும் வெட்கி கூனி குருகவேண்டும்.
என் தாய் தமிழ் உங்களுக்கு பெரிய நமஸ்காரம் . நீங்க சொன்ன கருத்தை என்னை போன்ற யாரவது சொல்லி இருந்தால் ஆசிரியர் பிரசுரித்திருக்கமாட்டார் . உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி .