ஜிஹாதி ஆதரவு ட்விட்டர் கணக்கு: மெஹ்தி பெங்களூருவில் கைது

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் சமூக ஊடக தள கணக்கொன்றை நடத்தியதான சந்தேகத்தில், இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

mehdi
கைதான இளைஞர் மெஹ்தி பிஸ்வாஸ்

 

கைதுசெய்யப்பட்டுள்ளது மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது இளைஞர் என பொலிசார் கூறுகின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் மெஹ்தி பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர் என்றும், இரவு பின்னேரத்தில் தனது டுவிட்டர் கணக்கில் இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பு பற்றி உத்வேகத்துடன் பதிவுகளை இட்டுவந்துள்ளார் அவர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

அதேநேரம் இஸ்லாமிய அரசு அமைப்பின் உறுப்பினர்களுடன் மெஹ்தி நிஜமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என தாங்கள் கருதவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

@shamiwitness என்ற ட்விட்டர் கணக்கை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் நடத்துகிறார் என்று பிரிட்டனில் இருந்து வரும் தொலைக்காட்சியான சானல் 4 அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

ஏஎனது குடும்பம் மட்டும் தன்னை நம்பியிருக்கவில்லை என்றால் நானும் இஸ்லாமிய அரசு அமைப்பில் சேர்ந்திருப்பேன்” என மெஹ்தி இந்தக் கணக்கில் கூறியிருந்ததாக சானல் 4 குறிப்பிட்டிருந்தது.

சானல் 4 தகவலை அடுத்து இந்திய போலிசார் விசாரணைகளை தொடங்கியிருந்தனர்.

இஸ்லாமிய அரசு அமைப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததுடன், சிரியாவிலும் இராக்கிலும் அந்த அமைப்பு பெற்று வந்த வெற்றிகளை இந்த டுவிட்டர் கணக்கில் வெளியான பதிவுகள் சிலாகித்து வந்தன.

இந்த ட்விட்டர் கணக்குக்கு 18,000 பேர் பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

இந்த இஸ்லாமிய அரசு குறித்த தகவல்களை அறிய இந்த ட்விட்டர் கணக்கு ஒரு முக்கிய வழியாக இருந்தது.

மெஹ்தி பயன்படுத்திய அந்த டுவிட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. -BBC

ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வாலிபர் பற்றிய திடுக்கிடும் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை பிடித்து அனுப்பிய பெங்களூர் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரிலிருந்து @shammiwitness என்ற பெயரில் செயல்பட்டு வந்த டிவிட்டர் கணக்கு மூலமாக, மூளைச்சலவை செய்யப்பட்ட பல இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்திருப்பதாக சேனல்-4 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து இந்திய உளவு அமைப்புகள் பெங்களூர் பொலிசாரிடம் இதுபற்றி தகவல்கள் கேட்டன.

இதனை தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதில், மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற இளைஞர் தான் இத்தீவிரவாத செயலை அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்நிலையில் மஸ்ரூர் இருக்குமிடம் வடக்கு பெங்களூருவிலுள்ள ஜாலஹள்ளியிலுள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஜாலஹள்ளியிலுள்ள மஸ்ரூர் அப்பார்ட்மென்டுக்குள் நேற்றிரவு அதிரடியாக நுழைந்த பொலிசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து கர்நாடக டிஜிபி லால் ருக்கும் பச்சாவோ இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 24 வயதான மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ், மேற்குவங்க மாநிலத்தின் குருநானக் இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தார்.

கல்லூரியிலேயே வேலைக்கான ஆஃபர் கிடைத்து பெங்களூரிலுள்ள உணவு பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் எக்சிகியூட்டிவாக பணிக்கு சேர்ந்தார்.

2012 முதல் பெங்களூருவில் அவர் வேலை பார்த்து வந்தார். மேதி மஸ்ரூர் பிஸ்வாசின் ஆண்டு சம்பளம் ரூ.5.3 லட்சமாகும்.

60 ஜிபி இன்டெர்நெட் டேட்டா-பேக்கை பயன்படுத்தி இரவு நேரங்களில் டிவிட்டரே கதியாக இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். பல்வேறு டிவிட்டர் தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து, உருது மொழியில் வரும் டிவிட்டுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ஆதரவாளர்களுக்கு பரப்பியுள்ளார். இவரை ஃபாலோ செய்யும் பலரும் ஐரோப்பியர்கள், எனவேதான் இங்கிலாந்து சேனல் இதை கண்டுபிடித்துள்ளது.

இவரது வீட்டில் இருந்து 2 செல்போன்கள், லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் இவருக்கு தொடர்பில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மீதான ஆர்வத்தால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். -http://www.tamilwin.com/

TAGS: