முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிதாக ஒரு அணையைக் கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ள இடத்தில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ்வரும் தேசிய வன விலங்குகள் வாரியமானது அனுமதி அளித்துள்ளதாக அதனுடைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வானது, கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு திட்டவட்டமாக தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழுவை நீதிமன்றம் அமைத்தது.

அணையை ஆய்வு செய்த அந்தக் குழுவானது அணை உறுதித்தன்மையுடனும், பூகோள ரீதியாகவும், வடிவமைப்பு வகையிலும் பலமாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும், அணையின் நீர் அளவை 142 அடி வரை உயர்த்தலாம் எனவும், புதிய அணை கட்டும் கோரிக்கையை கேரள அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறியது.

நீதிபதி தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றமானது முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை கடந்த மே மாதம் அளித்தது. இந்த விவகாரம் முடிவுற்று, கேரளத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய அணை கட்டுவதற்காக தேசிய வனவலங்குகள் வாரியத்திடம் அந்த மாநில அரசு மீண்டும் விண்ணப்பித்துள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்த முழுவிவரங்களையும் தெரிவிக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்: முல்லைப் பெரியாறு அணையானது பூகோள, நீரியியல் ரீதியாக வலுவானது என கண்டறியப்பட்டதுடன், அணையில் நீரின் அளவை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள தமிழகத்துக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிதாக மற்றொரு அணையைக் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமானது.

எனவே, தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக்குழுவானது புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளத்துக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 1886-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையானது தமிழக அரசுக்குச் சொந்தமாகும். அது மாநில அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையில் தமிழகத்துக்குள்ள உரிமையானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குத்தகை ஒப்பந்தம், அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான அனுமதி கோரி மத்திய அரசின் எந்தத் துறைக்கு விண்ணப்பித்தாலும் அதன்மீது நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை உடனடியாக எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். -http://www.dinamani.com

TAGS: