மதவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடிக்கு கலைஞர் வலியுறுத்தல்!

karunanithiதிமுக தலைவர் கலைஞர் 15-12-2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாகவும்தான் உள்ளன. அந்தக் கட்சியிலே உள்ள பலர் ஜனநாயகத்தையும் – அரசியல் சட்டத்தையும் அனுசரித்து முறையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதில் எச்சரிக்கையாக இருந்து வந்தபோதிலும், ஒரு சில அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மத-மொழி ரீதியாக ஒருதலைப்பட்சமாகவே நடந்து கொள்கிறார்கள். தொடர்ந்து அவர்களுடைய எதிர்மறை நடவடிக்கைகளை நாம் உரிய முறையில் எடுத்துக் காட்டி உணர்த்தியபோதிலும், அவர்களில் ஒருசிலர் தாங்கள் செய்வதையே தான் பிடிவாதமாகச் செய்து வருகிறார்கள்.

உதாரணமாக இன்றைய “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு முதல் பக்கத்திலே வெளியிட்டுள்ள செய்தியிலேயே, கிறித்தவ பெருமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாகக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பெரு விழாவிற்கு ஊறு தேடும் வகையில் நடந்து கொள்ள மத்திய அரசில் சிலர் முயற்சிப்பது தெரிகிறது. அதாவது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபைத் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளை “நல்லாட்சி தினம்” என்ற பெயரால் டிசம்பர் 25ஆம் தேதியன்று, அதாவது கிறிஸ்துமஸ் நாளன்று கொண்டாடுவதற்கு முன்வந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

அதையொட்டி மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அன்றையதினம் கட்டுரை போட்டிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கூறியிருக்கிறது. சி.பி.எஸ்.இ., நிர்வாகம், தனியார் நடத்தும் பள்ளிகள் உள்ளிட்ட அதன் பள்ளிகளுக்கு மத்திய அரசின் இந்த விருப்பத்தை நேரடியாகத் தெரிவிக்காவிட்டாலும், மத்திய அரசு, தானே நடத்துகின்ற “நவோதயா வித்யாலயா” பள்ளிகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பி, டிசம்பர் 24, 25 ஆகிய நாட்களில் “கட்டுரைப் போட்டி”களை நடத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக டிசம்பர் 25ஆம் தேதியன்று “கிறிஸ்துமஸ்” விடுமுறை நாள் என்பதை மாணவர்கள் விழாவாக கொண்டாட முடியாத ஒரு இக்கட்டான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இது போலவே, விஸ்வ இந்து பரிசத் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “வடக்கு உத்தரப் பிரதேசம், வாரணாசியிலிருந்து பத்தாயிரம் முதல் இருபதாயிரம் இஸ்லாமியர்களை அழைத்துச் சென்று கங்கை நதியிலே மூழ்கச் செய்து, அவர்களை இந்துக்களாக மாற்றப் போவதாகத்” தெரிவித்திருக்கிறார்கள்.

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பிரதமர் மோடி என்கிற போது, அங்கேயே இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுவது விமர்சனத்திற்குரியதாகும். மேலும் உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலே “தரம் ஜக்ரன் சமிதி” என்ற இந்து அமைப்பு, “இந்துவாக மாறும் கிறித்தவருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், இஸ்லாமியருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும் சன்மானம் வழங்கப் போவதாக” அறிவித்திருப்பது இந்தியாவில் இதுவரை நிலவி வரும் மதநல்லிணக்கத்தையே கேலிக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

எனவே இந்திய நாகரிகத்தைச் சிதைத்திட முனையும் இத்தகைய பிரச்சினைகளில் பிரதமர் மோடி அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, இதற்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால், பின்னர் எதிர் காலத்தில் இதுவே மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாகி அவருக்குப் பெரிய களங்கத்தை உண்டாக்கி விடும் என்பதை உணர்ந்து; இத்தகைய பிற்போக்கு உணர்வுகளையும், முயற்சிகளையும் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

 

-http://www.nakkheeran.in

TAGS: