நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரி வழக்கறிஞர் வி. ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், போஸின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. அவர், விமான விபத்தில் இறந்தது உறுதிப்படுத்தப்படவில்லை.
மத்திய அரசின் வசமுள்ள அவர் தொடர்பான ஆவணங்களின் விவரங்கள் வெளியாகாத வரை மர்மங்களும் நீடிக்கும்.
எனவே, அந்தக் கோப்புகளில் உள்ள விவரங்களை வெளியிட்டு, நேதாஜி மரணம் குறித்து மக்கள் மத்தியில் நீடிக்கும் மர்மங்களை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், போஸ் இன்னும் உயிருடன் உள்ளார், அவருக்கு தற்போது 117 வயது ஆகிறது. நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
எங்கள் அமைப்பின் தலைவர் அரவிந்த் பிரதாப்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸை இந்த நீதிமன்றம் முன் ஆஜர்படுத்த தயாராகவுள்ளார்.
ஆனால், அவரைப் போர் குற்றவாளியாக நடத்தமாட்டோம் என்றும், இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் எனவும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தால் நேதாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடுகையில், நேதாஜி 1945-ல் இறந்ததாகக் கூறுகின்றனர், ஆனால், 1948, 1949, 1962, 1964 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகளில் நேதாஜி பங்கேற்றுள்ளார்.
சீன அதிபர், மாசேதுங் ஆகியோருடன் நேதாஜி இருப்பது போன்ற படங்கள், நேதாஜி உயிருடன் இருப்பது தொடர்பான பல்வேறு கடிதங்கள் மற்றும் காணொளிகள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்வதற்குத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். -http://www.newindianews.com