இந்தியாவில் ஐ.எஸ். அமைப்புக்குத் தடை: ராஜ்நாத் சிங்

“ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது:

பல நாடுகளில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களது பிள்ளைகள் தீவிரவாத அமைப்புகளின் பிடியில் சிக்குவதை ஊக்குவிப்பதில்லை. அவர்களை நான் பாராட்டுகிறேன்.

மேலும், இந்திய இளைஞர்கள் மத்தியில் ஐ.எஸ். அமைப்புக்கு மிக மிகக் குறைந்த அளவே ஆதரவு உள்ளது. ஆனால் அவர்கள், அந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செயல்பாடுகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற தளங்களில், ஐ.எஸ். போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, கணினிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒன்றுமறியாத அப்பாவிகள் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்படமாட்டார்கள்.

அதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், அவைகுறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதனிடையே, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதில்:

இந்த விஷயம் மிகவும் உணர்ச்சிகரமானது. இதுதொடர்பாக அவையில் விவாதிக்க முடியாது. ஆனால், ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நிலவும் சூழல் குறித்து நாம் அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

இதுபோன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தடுக்க, தேசியப் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, குடியுரிமைக் கட்டுப்பாடுகளை வலுப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தீவிரவாத அமைப்புகளின் இணையதளம், சமூக வலைதளங்களின் பயன்பாடுகளைத் தடுப்பது சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் அஹமது பேசுகையில், “ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் இஸ்லாம் மதத்துக்கு எதிரானவை. தீவிரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை எங்கள் கட்சி ஆதரிக்கும்’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: