பெஷாவர் தாக்குதலுக்கு காரணம் இந்தியாவாம் : முஷாரப் உளறல் பேச்சு

pervezஇஸ்லாமாபாத்: பெஷாவர் தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பும் ஆப்கானிஸ்தானும் தான் என பாக்.முன்னாள் அதிபர் முஷாரப் தனது உளறல் பேச்சில் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வார்சக் சாலையில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாயினர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு ஆப்கானில் செயல்படும் தலிபான் பயங்கரவாதி முல்லா பஸ்லுல்லா தான் காரணம் எனவும், தலிபான் கமாண்டர் உமர் நரேய் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. பஸ்லுல்லாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா தான் காரணமாம்

இந்நிலையில் பாக். முன்னாள் சர்வாதிகாரியும், ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரப் , டி.வி. சானல் ஒன்றிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது:

பெஷாவர் தாக்குதலுக்கு காரணம் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தான். முக்கிய பயங்கரவாதியான முல்லா பஸ்லுல்லா, ஆப்கானிஸ்தானில் செயல்படும் தக்ரிக் -இ- தலிபான் அமைப்பின் கமாண்டர் ஆவான். இவனை வளர்த்து ஆளாக்கிவிட்டதே முந்தைய ஆப்கான் அதிபராக இருந்த ஹமீத் கர்சாய் அரசு தான், கர்சாய் இந்தியாவுடன் நல்லுறவு வைத்துள்ளார், இந்தியாவின் உளவு அமைப்பான “ரா” பஸ்லுல்லாவிற்கு பயிற்சி அளித்துள்ளது. இவ்வாறு முஷாரப் பேசியுள்ளார்.
இந்தியாவில் நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதியான ஹபீஸ் சையத் கூறுகையில், பெஷாவர் தாக்குதலில் பின்னணியில் இந்தியா உள்ளது என்றார்.

-http://www.dinamalar.com

பாக்., பள்ளியில் 132 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் புகைப்படம்

தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கியது.

 

பாகிஸ்தானில், பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 141 சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவன், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள்.

 

தீவிரவாத தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்தால், பெஷாவர் நகர் துயரத்தில் மூழ்கியது. மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப், அவசர பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார்.

 

தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அந்த நாட்டு ராணுவத்துடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பெஷாவர் நகரில் முகாமிட்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப், அனைத்து கட்சி மாநாட்டை கூட்டி, மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றியுள்ளார்.

 

இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலீபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர். இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது குராசானி பேசுகையில், “தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தினர்.

 

வடக்கு வாஜிரிஸ்தானில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் (ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து) இந்த தாக்குதல்கள். எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினான். தற்போது பாகிஸ்தானில் பள்ளியில் 132 குழந்தைகள் உள்பட 141 பேரை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகளின் புகைப்படத்தை தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான் தீவிரவாத இயக்க தலைவன்தான், தீவிரவாத தாக்குதலை செயல்படுத்தியுள்ளான் என்றும் செய்திநிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.nakkheeran.in

தலிபான்களின் அட்டூழியத்தை ஒடுக்க பாகிஸ்தானில் அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம்

தலிபான்களின் அட்டூழியத்தை ஒடுக்க அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று கூட்டினார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் குர்ஷித் கான் மற்றும் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரிப்,   ‘’கடைசி தீவிரவாதியை தீர்த்துக் கட்டும் வரை தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் ‘ஸர்ப்-இ-அஸப்’ தாக்குதல் தொடரும். இந்த தாக்குதலை மேலும் தீவிரமாக்குவது தொடர்பாக பரிந்துரைக்க உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் இடம் பெறும் தேசிய செயல்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குழு இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடத்தப்படும் தலிபான்களுக்கு எதிரான உச்சக்கட்ட தாக்குதலில் நல்ல தலிபான், கெட்ட தலிபான் என்று பாகுபாடு பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.

-http://www.nakkheeran.in

TAGS: