வேர்களை வெறுக்கும் விழுதுகள்: கண்டிக்காத சமூகம்; தண்டிக்காத சட்டம்

old_age_home

தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் வாழ்வின் சடங்கு போல நடப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரமிளா கிருஷ்ணன். கண்டுகொள்ளாத சமூகமும், தண்டிக்காத சட்டமும் இவை தொடர்வதற்கான காரணிகள் என்கிறார் அவர்.

பிறந்த குழந்தைக்கு காது குத்துவது, பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நட்த்துவது என்பதைப் போல, வயதான, சுயமாக வாழ இயலாத முதியவர்களை, தலைக்கூத்தல் மூலமோ, விஷ ஊசியின் மூலமோ கொல்வது என்பது வாழ்வின் இயல்பானதொரு சடங்கான நிகழ்ச்சி என்பதைப்போல சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது அல்லது கண்டும் காணாமல் விடப்படுகிறது என்கிறார் அவர்.

அதனால் தான் தமிழ்நாட்டில் பரவலாக பலவகையான முதியோர் கொலைகள் தொடர்ந்து நடந்தாலும், இது குறித்து மாநில அரசுக்கு நன்கு தெரிந்தாலும் இதுவரை முதியோர் கொலைக்காக பெரிய அளவில் நீதிமன்ற தண்டனை எதுவும் கிடைக்கவில்லை என்கிறார் பிரமிளா கிருஷ்ணன்.

தமிழ்நாட்டின் முதியோர் கொலைகள் தொடர்பில் தொடர்ந்து செய்தி சேகரித்து வரும் அவர் அந்த பிரச்சனையை தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் முதன்முதலில் கொண்டு சென்றபோது அந்த மாவட்ட ஆட்சியரால் இதை நம்ப முடியவில்லை என்றும், தனது கீழ் அதிகாரிகளை அழைத்து அவர் இதுகுறித்துக் கேட்டபோது அவர்கள் இதைக்கண்டு ஆச்சரியப்படவில்லை என்கிறார் பிரமிளா. இது ஒன்றும் புதிய செய்தியல்ல என்றும், எல்லா ஊரிலும் நீண்டநாட்களாக நடப்பதாக அவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்ததாக கூறுகிறார் பிரமிளா.

கண்டுகொள்ளாத சமூகம்; தண்டிக்காத சட்டம்

ஒருபக்கம் சிவில் சமூகம் இதை சடங்காக்கி வைத்திருக்கிறது; மறுபக்கம் இதை தடுக்கவேண்டிய அல்லது தண்டிக்கவேண்டிய தமிழக அரசு இந்த பிரச்சனையை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அணுகுகிறது. குறிப்பாக முதியோர் கொலைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்ட மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இந்த பிரச்சனை குறித்து அவர்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்களை பெற முயன்றும் முடியவில்லை.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்த ஒரு காவல்துறை உயர் அதிகாரி, அடிப்படையில் சமூக பிரச்சனையான இதில் காவல் துறை மேலதிக தலையீடு செய்வது கடினம் என்று விளக்கமளித்தார். தமிழக காவல்துறைக்குத் தேவை இது குறித்த முறையான புகார் மற்றும் நீதிமன்றம் ஏற்கத்தக்க சட்டரீதியிலான சாட்சிகள். முதியோர் கொலைகளைப் பொறுத்தவரை இவை இரண்டுமே கிடைப்பதில்லை.

வாழ்ந்து முடித்த முதியவர்களை கொல்லும் முடிவை பெரும்பாலும் அவர்களின் குடும்பமே எடுப்பதால் இதில் அந்த முதியவர் சார்பில் புகார் கொடுக்க வேறு யாரும் முன்வருவதில்லை என்பது முதல் பிரச்சனை. இரண்டாவதாக, அவரது உறவினர்களுக்கு உண்மை தெரிந்தாலும் “இறப்பை எதிர்நோக்கியிருந்தவர் கொஞ்சம் முன்னதாகவே இறந்துவிட்டார்” என்பதாகவே அவர்கள் இதை எடுத்துக்கொள்வதாகவும், காவல்துறையிடம் சென்று புகார் கொடுத்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க யாருக்கும் ஆர்வமோ, நேரமோ இருப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார் பிரமிளா கிருஷ்ணன்.

கொல்லப்படுபவரின் வயதைப் பொறுத்தே நீதி

அதேசமயம், முதியோர் கொலைகளை இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறை வேறு சந்தேக மரணங்களை உரியமுறையில் விசாரிப்பதாக கூறுகிறார் உசிலம்பட்டியைச் சேர்ந்த யுரைஸ் என்கிற தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் நெப்போலியன் ராஜ். குறிப்பாக தற்கொலை என்று குடும்பம் மூடிமறைந்த இளம்பெண்ணின் கொலை குறித்து தாங்கள் புகார் செய்ததும் காவல்துறை அந்த இளம்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனை செய்து கொலைவழக்காக பதிந்ததாக தெரிவித்தார் நெப்போலியன் ராஜ்.

மேலும் தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகளைப்பொறுத்தவரை, ஏழை பணக்காரன் வித்தியாசமோ, ஜாதி மற்றும் மதம் சார்ந்த வேறுபாடுகளோ பெரிய அளவில் இருப்பதில்லை என்றும் நெப்போலியன் ராஜ் தெரிவித்தார்.

பொதுவாக கிராமவாசிகள் மற்றும் ஏழைகளின் வீடுகளுக்குள் ஊரில் இருக்கும் யார் வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் சென்றுவர முடியும் என்பதால், அவர்கள் வீடுகளில் நடக்கும் முதியோர் கொலைகள் வெளியில் தெரிவதாகவும் ஆனால் இதற்கு நேர்மாறாக படித்த வசதியானவர்கள் மற்றும் நகர்ப்புறவாசிகளின் வீட்டிற்குள் மற்றவர்கள் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது என்பதால் அவர்கள் செய்யும் முதியோர் கொலைகள் அவ்வளவு எளிதில் வெளியில் தெரிவதில்லை என்றும் கூறுகிறார் உசிலம்பட்டியில் இருக்கும் யு ரைஸ் என்கிற தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த களப்பணியாளர் செல்வராணி.

இப்படி தங்களுக்கு இனி தேவையில்லை என்று பலவந்தமாக கொல்லப்படும் முதியவர் கொலைகள் கூட நினைத்தமாத்திரத்தில் செய்து முடிக்கும் நிகழ்வுகள் அல்ல. மாறாக, முதியோர் மரணத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு ஏற்ப நன்கு ஏற்ப திட்டமிட்ட வகையில் இந்த கொலைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தங்கள் முதிய பெற்றோரை ஏதோ காரணத்தால் நேரடியாக கொல்லஇயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள், அவர்களை புனித யாத்திரை என்கிற பெயரில் காசி, மதுரா போன்ற தொலைதூர புண்ணியஸ்தலங்களுக்கு புனித யாத்திரை செல்வதாக அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவதாகவும் கூறினார் ராசாத்தி. பயன்படாத பழைய குப்பையை வீட்டை விட்டு வெளியில் வீசுவதைப்போல முதுமையான பெற்றோர்களும் கையாளப்படுகிறார்கள் என்கிறார் அவர். -BBC

TAGS: