கேரளத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்

கேரளத்தில் வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்கள் மீதும், ஒரு கேஎஃப்சி உணவகம் மீதும் மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.

வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று 2 வாரங்களே ஆன நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வன மண்டலத்துக்கு உள்பட்ட முக்கோலா என்ற இடத்தில் வனத் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகத்தில் இருந்த கணினி, மேஜை, நாற்காலிகள், ஜன்னல்கள் சேதமடைந்தன.

மேலும் அந்த கும்பல் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கும் தீ வைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் இருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாலக்காடு, சந்திரா நகரில் உள்ள கேஎஃப்சி உணவகத்திலும் மர்ம கும்பல் தாக்குதல் நடத்திச் சென்றது. பிறகு, அந்த உணவகத்தின் கட்டட சுவரில் அமெரிக்காவை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

வயநாடு: இந்நிலையில், வயநாடு மாவட்டம், வெள்ளமுண்டா வனப் பகுதியில் குன்ஹோமில் உள்ள வன பாதுகாப்புக் குழு அலுவலகத்தையும் மாவோயிஸ்டுகள் சேதப்படுத்தினர்.

இதுகுறித்து வயநாடு மாவட்ட ஆட்சியர் கேஷவேந்த்ர குமார் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், “சுவரொட்டியில் உள்ள வாசகங்கள், தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஆகியவை இதன் பின்னணியில் மாவோயிஸ்டுகள் இருப்பதை காண்பிக்கிறது’ என்றார்.

முன்னதாக, கடந்த 1ஆம் தேதி வயநாடு வெள்ளமுண்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: