பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் தொடர்கிறது

bjp-flag-_newபுதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் தொடர்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ., ஜம்மு – காஷ்மீரில், இரண்டாவது இடத்தைப் பெற்று, அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி வியூகங்கள் சாத்தியமானால், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள, மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து, ஜம்மு – காஷ்மீரிலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

ஐந்து கட்டங்களாக நடைபெற்ற, ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை, அந்தந்த மாநிலங்களில் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே, இவ்விரு மாநிலங்களிலும் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மீண்டும் கைப்பற்றியது:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற, மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போல, ஜார்க்கண்டிலும், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. ஏ.ஜே.எஸ்.யு., என்ற கட்சியுடன் இணைந்து, அந்த மாநிலத்தில், பா.ஜ., ஆட்சியை மீண்டும் கைப்பற்றுகிறது.நேற்று இரவு நிலவரப்படி, மொத்தம். 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வும் அதன் கூட்டணி கட்சியான ஏ.ஜே.எஸ்.யு.,வும் இணைந்து, 42 தொகுதிகளிலும், ஆளும் ஜே.எம்.எம்., 19, ஜே.வி.எம்., கட்சி 8, காங்கிரஸ் 6 மற்றும் பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.கடந்த 2009 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு 23 இடங்களும், ஜே.எம்.எம்., கட்சிக்கு 18, காங்கிரசுக்கு 21 இடங்கள் கிடைத்தன.பா.ஜ.,வுக்கு சோதனை களமாக அமையும் என கருதப்பட்ட, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், மொத்தமுள்ள, 87 தொகுதிகளில், 44 இடங்களை கைப்பற்றுவோம் என சூளுரைத்து, ‘மிஷன் 44’ என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கிய பா.ஜ.,வுக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, கைக்கு எட்டிய தூரத்தில் தட்டிச் சென்றது.

வெற்றி:மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, அதிக இடங்களைப் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தை, பா.ஜ.,வும், மூன்றாவது இடத்தை, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியும் பிடித்தன.நேற்று இரவு நிலவரப்படி, மக்கள் ஜனநாயக கட்சி, 28 இடங்களிலும், பா.ஜ.,வும் அதன் கூட்டணி கட்சிகளும், 27 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12, பிறர் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.கடந்த 2008 தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சி 21, பா.ஜ., 11, தேசிய மாநாட்டு கட்சி 28, காங்கிரஸ் 17, பிறர் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். தற்போது, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற ரீதியில், மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைய உள்ளது.எனினும், எந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டு, எந்த கட்சி ஆட்சி என்பது, இன்று தான் ஓரளவுக்கு முடிவாகும். நேற்றைய நிலையில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளும், ‘எந்த கட்சியுடனும் இணைந்து ஆட்சி அமைக்க தயார்’ என்ற ரீதியில் அறிக்கை விடுத்ததால், ஜம்மு – காஷ்மீரில், அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் பா.ஜ., முதல்வர் யார்? ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி அமைப்பது முடிவாகி விட்டதால், அந்த மாநிலத்தின், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் போட்டியில், இரண்டு பிரபலங்கள் உள்ளனர்.அவர்கள், சர்யு ராய் மற்றும் ரகுபர் தாஸ். சர்யு ராய், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வுக்கு வந்தவர். மாணவர்பருவத்திலிருந்தே சங் பரிவார் அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர்.ரகுபர் தாஸ், கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். 2010ல், துணை முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். அந்த மாநிலத்தின், பா.ஜ., முன்னாள் முதல்வர்களான அர்ஜுன் முண்டா, மதுகோடா ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில் மூன்று வாய்ப்புகள்:
1. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.,வும் இணைந்து, தலா, மூன்றாண்டுகள் என்ற ரீதியில் ஆட்சி அமைக்கலாம். மெகபூபாவின் தந்தை, முப்தி முகமது சயீத் முதல்வராகலாம்.ஆனால், இதுவரை இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே, எந்த விவகாரத்திலும் நெருக்கம் இருந்ததே இல்லை; அதனால், இதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

2. மக்கள் ஜனநாயக கட்சியும், காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்கலாம். ஏனெனில், மக்கள் ஜனநாயக கட்சி என்ற பெயரில் கட்சியை துவக்கும் முன், முப்தி முகமது சயீத், காங்கிரசில் தான் இருந்தார் என்பதால், அவ்விரு கட்சிகளும், இயற்கையாகவே கூட்டணி கட்சிகளாக விளங்குகின்றன.எனினும், அவ்விரு கட்சிகளுக்கும், எவ்விதத்திலும் இணக்கமான போக்கு இதுவரை காணப்படவில்லை.

3. பா.ஜ.,வும், ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கலாம். இவ்விரு கட்சிகளும், தலா மூன்றாண்டுகள் ஆட்சியை பகிர்ந்து கொள்ளலாம். இதில், சஜாத் லோனேயின் மக்கள் ஜனநாயக கட்சி இணையலாம்.ஏனெனில், தேசிய மாநாட்டு கட்சி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பல ஆண்டுகள் இணைந்திருந்தது.

வெற்றி – தோல்வி:
*ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு, பீர்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.
*மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முப்தி முகமது சயீத், அனந்தநாக் தொகுதியில் வெற்றி பெற்றார்.
*’மோடி என் சகோதரர் போன்றவர்’ எனக் கூறிய, மக்கள் மாநாட்டு கட்சித் தலைவரும், முந்தைய பிரிவினைவாத தலைவருமான சஜாத் லோனே வெற்றிபெற்றுள்ளார்.
*பா.ஜ.,வின் பெண் வேட்பாளர் ஹீனா பட், தோல்வி அடைந்தார்.
*பா.ஜ.,வுக்கு ஜம்மு பகுதியில் அதிக இடங்கள் கிடைத்தன. சமவெளி பகுதியில் இடங்கள் கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயக கட்சிக்கு, காஷ்மீர் சமவெளி பகுதியில், அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

ஜம்மு – காஷ்மீரில், பா.ஜ., ஆட்சி அமைக்க அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளன. அதுபோல, பிற கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது, வெளியில் இருந்து பிற கட்சிக்கு ஆதரவு அளிப்பது ஆகிய மூன்று வாய்ப்புகளும் உள்ளன. இதில், பிற கட்சிகள் என்ன முடிவு எடுக்கின்றன என்பதை பொருத்தே எங்கள் நடவடிக்கை அமையும். பா.ஜ., பார்லிமென்ட் போர்டு நாளை கூடுகிறது; அதில் முக்கிய முடிவெடுக்கப்படும்.
-அமித் ஷா
பா.ஜ., தேசிய தலைவர்

ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் எந்தவிதமான, எங்களுக்கு ஒத்து வராத எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டோம். யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்பதையும், அது எப்போது முடிவு செய்யப்படும் என்பதையும் இப்போது கூற முடியாது. தேர்தல் முடிவுகளின் படி, நாங்கள் தான் ஜம்மு – காஷ்மீரில் ஆட்சி அமைப்போம்.
-மெகபூபா முப்தி
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்

-http://www.dinamalar.com

TAGS: