ஆயுதப் பற்றாக்குறையால் தவிக்கும் இந்திய இராணுவம்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்

IndianArmyகாஷ்மீரில் உள்ள உறை பனி மலையான சியாச்சின் சிகரம் மற்றும் லே போன்ற பனி மலைப்பிரதேசங்களில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு அடிப்படை தேவையான துப்பாக்கிகள், தோட்டாக்கள், கொசுவலைகள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் மற்றும் பூட்ஸ்கள் போன்றவை போதுமான அளவில் சப்ளை செய்யப்படாததால், பற்றாக்குறை நிலவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜனதாவை சேர்ந்த மேஜர் ஜெனரல் பி.சி. கந்தூரி தலைமையிலான நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 33 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்கமிட்டி, பாதுகாப்புத் துறையில் காணப்படும் குளறுபடிகள் மற்றும் பிரச்னைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், ராணுவத்தின் தயார் நிலை குறித்த தனது மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இன்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதனை அக்கமிட்டி தாக்கல் செய்துள்ளது.

அதில், சியாச்சின் மற்றும் லே ஆகிய மிக உயரம் கொண்ட பனி சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ஏறக்குறைய 2 லட்சம் ஜோடி தோல் பூட்ஸ்கள், 13 லட்சத்திற்கும் அதிகமான கேன்வாஸ் பூட்ஸ்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொசு வலைகள் தேவையாக உள்ளன. மேலும் முகத்தை எப்போதும் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கு சுமார் 65,000 முக உறைகள் தேவையாக உள்ளது. இவற்றை எதிர்பார்த்து அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பனி சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் எத்தனை பேருக்கு புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் தேவைப்படுகின்றன என்ற விவரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் தர இயலவில்லை. மிக முக்கியமான உயிர் காக்கும் உபகரணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வாங்காததால், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் உயிர் ஆபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இருட்டில் பார்க்கக்கூடிய கண்ணாடிகள் ஏராளமாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகின்றபோதிலும், ராணுவ தரப்பிலோ இந்த இரவு கண்ணாடிகளின் தேவை அதிகம் உள்ளதாக மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளது. இது ராணுவத்தின் நம்பிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் பெறவில்லை என்றே எண்ண வைக்கிறது.

மேலும் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, ஒரு நீண்ட கால போரை நாடு தாங்கி நிற்கும் சாத்தியமில்லாததையே காட்டுகிறது என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.

அத்துடன் ராணுவத்திற்கான தொழில் நுட்பங்களை ஆராய்ச்சி செய்து வழங்குவதற்காக அமைக்கப்பட்ட டிஆர்டிஓ அமைப்பு, ராணுவத்திற்கென உள்ள உலகத்தரத்துடன் ஏற்கத்தக்க அம்சங்களுடன் கூடிய ரைஃபிளை உருவாக்கி அளிக்க கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்தே தவறிவிட்டது.

ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும் டிஆர்டிஓ நிபுணர்களால் உலகம் தரம் வாய்ந்த ஒரு ரைஃபிளை உருவாக்க இயவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்கமிட்டி கூறியுள்ளது.

-http://www.tamilcnnlk.com

army parade

TAGS: