அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள், இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்த போதிலும் அம்மாநில காவல்துறை அலட்சியமாக இருந்ததால் அப்பாவி மக்கள் உயிரிழக்க நேர்ந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு பின் போடோ தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியதில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அம்மாநிலத்தில் உள்ள கோக்ரஜார், சிராங், சோனிட்பூர் மற்றும் உடல்குரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அங்கு வசித்து வந்த 5000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகளிலும், தேவாலயங்களிலும் தங்கியுள்ளனர்.
இதனிடையே மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளார். அங்கு அம்மாநில முதல்வர் தருண் கோகோயுடன் ஆலோசனை நடத்திய அவர், தற்போது கோகோயுடன் தாக்குதல் நடத்தப்பட்ட சோனிட்பூர் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.maalaimalar.com