ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், அதில் பாஜக முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், ஜம்முவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மத்தியப் பார்வையாளராக அருண் ஜேட்லி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் அரசமைப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வதற்கான அதிகாரத்தை கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு எம்எல்ஏக்கள் அளித்துள்ளனர். நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்துவது, வளர்ச்சி, பிராந்திய சமத்தன்மையைப் பராமரிப்பது ஆகிய மூன்று கொள்கைகளுடன் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம். ஏற்கெனவே, ஜம்மு-காஷ்மீரில் வீட்டோ அதிகாரமானது காங்கிரஸ் கட்சியின் கையில் இருந்தது. தற்போது அந்த அதிகாரம் பாஜக வசம் உள்ளது. கட்சி சார்பற்ற எம்.எல்.ஏக்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். எனினும் மாநிலத்தில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களுடன் நாங்கள் விவாதித்து வருவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.
பொறுத்திருந்து பார்ப்பதாக இருந்தாலும் சரி, தீவிரமாக நடவடிக்கையில் இறங்கினாலும் சரி, எங்களின் உத்தி குறித்து ஊடகங்களிடம் கூற மாட்டோம். நாங்கள் பின்பற்ற வேண்டிய உத்தி தொடர்பாக எம்எல்ஏக்களிடம் இரு வேறு கருத்துகள் இல்லை.
மாநிலத்தில் மொத்தமுள்ள 87 இடங்களில் எங்கள் கட்சி 76 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டன. அந்த வகையில் எங்கள் கட்சிக்குக் கிடைத்த வாக்கு விகிதம் அதிகமாகும். ஜம்மு பிராந்தியத்தில் மக்கள் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), தேசிய மாநாட்டுக் கட்சி, சுயேச்சைகள் என்று மக்கள் தீர்ப்பு பிளவுபட்டிருந்தது என்றார் ஜேட்லி.
இதனிடையே, மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைப்பது, பேரவையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்வது, கட்சி ஆற்ற வேண்டிய பங்கு ஆகியவை குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாஜகவின் மூத்த தலைவர் ராம் மாதவ் கூறுகையில், “”மாநில மக்களுக்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்காக பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், அங்கு புதிய ஆட்சியை அமைக்கப் போவது யார்? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
அமித் ஷாவுடன் ஒமர் சந்திப்பா?
தில்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா புதன்கிழமை இரவு சந்தித்ததாகவும், அப்போது காஷ்மீரில் ஆட்சியமைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாகவும் வெளியான செய்தியை இரு கட்சிகளும் மறுத்துள்ளன.
ஒமர் அப்துல்லா புதன்கிழமை தில்லிக்குச் சென்றிருந்தார். அப்போது அமித் ஷாவை, அவர் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாயின. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை இரு கட்சிகளும் மறுத்துள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சி – பாஜக தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒமர் அப்துல்லா கூறுகையில், லண்டனில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள தனது தந்தை பரூக் அப்துல்லாவைச் சந்திக்க சனிக்கிழமை செல்ல உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தில்லி சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பிடிபி தலைமையில் கூட்டணி ஆட்சி: காங்கிரஸ் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 28 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பதவிக்காக தவமிருக்கும் சில கட்சிகளும், தனிநபர்களும், சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைக் குலைக்க முயற்சிப்பது கவலையளிக்கிறது.
இந்நிலையில், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான பார்வை கொண்டவரும், பரந்த அனுபவம் வாய்ந்தவருமான மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முஃப்தி முகமது சயீது தலைமையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கருத்தில் கொண்டு, ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமை எந்த வகையான குதிரை பேரத்திலும் ஈடுபடக் கூடாது என்று அந்த செய்திக்குறிப்பில் சைபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
தில்லியில் பாஜக தலைவர்களை தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா சந்தித்ததாக செய்திகள் வெளியானதையடுத்து, சைபுதீன் சோஸ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com