மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்துமாறு மத்திய அரசை தமிழக பாஜக வலியுறுத்தும் என அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
சுனாமியால் பேரழிவு ஏற்பட்டதன் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மீனவரணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி, மீனவரணி மாநிலத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கடலில் பால் ஊற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான மீனவர்களுக்கு உதவிப் பொருள்களை தமிழிசை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுனாமியால் பேரழிவு ஏற்பட்டு 10 ஆண்டுகளாகி விட்டது. சுனாமி ஏற்பட்டபோது பாஜக சார்பில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதனை மத்திய அரசிடம் தமிழக பாஜக வலியுறுத்தும். மீனவர்களின் பிரச்னைகளை கையாள்வதற்காக மத்திய வெளியுறவுத் துறையில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் மத்திய பாஜக அரசு உறுதியுடன் உள்ளது என்றார் தமிழிசை.
மீனவப் பெண் தொழிலாளர்கள் கோரிக்கை: மீனவப் பெண் தொழிலாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், சு.சாமுண்டீஸ்வரி சென்னையில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியது: மீனவர் நல வாரியத்தில் மீனவப் பெண் தொழிலாளர்களாகச் சேர்க்க மறுப்பதோடு, அவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க அரசு மறுக்கிறது. மீனவப் பெண் தொழிலாளர்களுக்கு மாநில மற்றும் தேசியக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். தனி அமைச்சகம் அமைத்து தர வேண்டும். மிக, முக்கியமாக மீன் சந்தைகள் உள்ள பகுதிகளில் கழிவறைகள், ஓய்வறைகள் ஆகியவை அமைத்து தர வேண்டும் என்றார் சாமுண்டீஸ்வரி.
-http://www.dinamani.com