ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? பி.டி.பி., பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு

ஜம்மு- காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு, சட்டப்பேரவையில் 28 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), 25 உறுப்பினர்களுடன் 2ஆவது பெரிய கட்சியாக விளங்கும் பாஜக ஆகியவற்றுக்கு ஆளுநர் என்.என். வோரா வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் மாளிகை அதிகாரி தெரிவிக்கையில், “பிடிபி தலைவர் முஃப்தி முகமது சயீத், பாஜக மாநிலத் தலைவர் ஜுகல் கிஷோர் ஆகியோருக்கு தனித்தனியே, மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

அதேசமயம், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “இரு கட்சிகளிடமும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலத்தை நிருபிக்கும் வகையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களுடன் வருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்தன. ஆனால், இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், 28 இடங்களைப் பிடித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியும், 25 இடங்களில் வென்றுள்ள பாஜகவும், மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக கடந்த 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதேபோல், மாநிலத்தில் பாஜக ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக பிடிபி-க்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று 15 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சியும், 12 பேரைக் கொண்ட காங்கிரஸூம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த ஆதரவை ஏற்பது குறித்தும் பிடிபி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

பாஜகவுக்கும், தனது கட்சிக்கும் எந்தப் பேச்சும் நடக்கவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா ஏற்கெனவே அறிவித்துள்ளார். மேலும், அவர் சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், “பிடிபிக்கு எங்களது ஆதரவை வாய்மொழியாகத்தான் தெரிவித்துள்ளோம். ஆனால், நாங்கள் ஆதரவுக் கடிதம் அளித்திருப்பதாக தெரிவித்து, பாஜக மனதில் உள்ளதை அறிவதற்காக பிடிபி விளையாடுகிறது. ஆனால் அதுபோல் எந்தக் கடிதமும் அளிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆட்சியமைக்கும் விவகாரத்தில், மாநிலக் கட்சிகளை ஓரங்கட்டும் பாஜகவின் செயலானது, மாநில மக்களுக்கு எதிரானது’ எனத் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. அதே போல, காங்கிரசும், சுயேச்சை எம்எல்ஏக்களும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளன. காஷ்மீரில் முதல் முறையாக ஆட்சி அமைக்கும் பாஜவின் முயற்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 87 தொகுதிகளில் முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) 28 இடங்களையும், பாஜ 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12, மற்றவைகள் 7 இடங்களையும் கைப்பற்றின. ஆட்சி அமைக்க தேவையான 44 தொகுதிகள் யாருக்கும் கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி  நீடித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, பல்வேறு மாநிலங்களை கைப்பற்றி வரும் பாஜ, காஷ்மீரிலும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. எந்தக் கட்சி ஆதரவு அளித்தாலும் ஏற்கத் தயார் என தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்தார். ஆனால், எந்த நிலையிலும் பாஜவுக்கு ஆதரவு தர முடியாது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார்.

காங்கிரசுடன் கூட்டணி சேர முடியாது என்பதாலும், சுயேச்சைகளும் ஆதரவு அளிக்காததாலும், சுழற்சி முறையில் ஆட்சி நடத்தும் யோசனையுடன் அதிக இடங்களை பிடித்த மக்கள் ஜனநாயக கட்சியுடன் பாஜ பேச்சுவார்த்தை நடத்தியது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், பிடிபி கட்சியின் மூத்த தலைவர் முசாபர் ஹூசேன் பைய்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றும் அவர்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சுழற்சி முறையில் ஆட்சி நடத்தும் பாஜவின் யோசனையை பிடிபி கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பமாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறியிருப்பது பாஜவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ட்விட்டரில் கூறிய உமர் அப்துல்லா, ‘பிடிபி கட்சிக்கு ஆதரவு தருவதாக எழுத்துப்பூர்வமாக எந்த கடிதமும் தரவில்லை. ஆனாலும், மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக, மக்கள் ஜனநாயக கட்சி ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயாராக உள்ளோம்‘ என கூறி உள்ளார்.

அதே போல, காங்கிரசும், 6 சுயேச்சைகளும் பிடிபி கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. காங்கிரசின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘பிடிபி ஆட்சி அமைப்பதானால் அக்கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறோம். பிடிபி, பாஜ இணைந்து ஆட்சி நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த வகையிலும் அவர்களுக்குள் ஒத்துப் போகாது‘ என்றார். ஏற்கனவே 2002ல் பிடிபி, காங்கிரஸ் கூட்டணி 6 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. இதனால், முதல் முறையாக காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் பாஜவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் அழைப்பு

ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த ஜனவரி 1ம் தேதி வருமாறு முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள பிடிபி, பாஜ கட்சிகளுக்கு மாநில ஆளுநர் என்.என். வோரா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். எனவே, வரும் 1ம் தேதி இரு கட்சிகளும் ஆளுநரை சந்தித்து, தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகள் குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்தும் முடிவை அறிவிக்க உள்ளன. கடந்த 2002ல் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்ட போது, பிடிபி கட்சி தனது முடிவை அறிவிக்க 22 நாட்கள் ஆனது. இதனால், இம்முறை கால தாமதத்தை தவிர்க்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநர், இரு கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinakaran.com

TAGS: