நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க: மோடி

modi_gandhi_001புதுடில்லி: நதிகள் இணைப்பு திட்டத்தின் படி, எந்த திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கண்டறியுமாறு, மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதுகுறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

சட்ட திருத்தம்:

பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம், டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், நிலம் கையகப்படுத்துதலுக்கு இடையூறாக உள்ள, 13 சட்டங்களை திருத்துவது என, முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விவசாயம், நீர்பாசனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என, முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று, விவசாயம், நீர்வளத் துறை, கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவையாவன:
* பிரதமரின், ‘கிரிஷி சஞ்சல் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை, விரைந்து செயல்படுத்த வேண்டும்.
* பிரதமரின் கிரிஷி சஞ்சல் யோஜனா திட்டப்படி, ஒவ்வொரு பண்ணைக்கும், போதுமான நீர்பாசனவசதி செய்வதற்கான இலக்கை எட்ட வேண்டும்.
* தண்ணீர் சிக்கனம், புதிய நீர்பாசன தொழில்நுட்பங்களை பின்பற்றும் விவசாயிகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
* தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை, பிரதமரின் கிரிஷி சஞ்சல் திட்டத்துடன் இணைத்து, அதன் விளைவுகள் என்ன என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார். மேலும், மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய திட்டமான, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முன்னுரிமை:

நாடு முழுவதும், பல நதிகள் இணைக்கப்பட உள்ள நிலையில், எந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; எந்த திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கண்டறியுமாறும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு மோடி உத்தரவிட்டார். இதனால், நதிகள் இணைப்பு திட்டம், விரைவில் வேகமடையும் என, எதிர்பார்க்கலாம்.

மேலும், பிரதமர் மோடி கூறியதாவது:
* நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை, செயற்கைக்கோள் உதவியுடன் வரைபடம் தயாரித்து, அதன்மூலம் விவசாயிகளுக்கு, கைவசம் உள்ள நீர்பாசன வசதி என்ன என்பதை விளக்க வேண்டும்.
* முக்கிய நகரங்களில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி திட்டங்களில் இருந்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்துவது குறித்த விரிவான திட்டங்களை ஆராய வேண்டும்.
* குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை, மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, பிரதமர் மோடி உத்தரவிட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-http://www.dinamalar.com

TAGS: