ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பாவில் சர்வதேச எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) மீது பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து, இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 4 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எஃப் ஐ.ஜி. ராகேஷ் சர்மா தெரிவித்ததாவது:
சம்பா பகுதியில் சஸ்டேகா என்னுமிடத்தில், பிஎஸ்எஃப் வீரர்கள் காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் படையினர் திடீரென அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், ஸ்ரீராம் கௌரியா என்ற வீரர் பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதுபோல, கந்துவா, சம்பா மாவட்டங்களில் பிற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் படையினர் கடந்த 24 மணி நேரத்தில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருப்பது இது 2ஆவது முறையாகும். இதையடுத்து, பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்களும் கடுமையான பதிலடி கொடுத்தனர். இதில், பாகிஸ்தான் தரப்பில் 4 பேர் பலியாகினர்.
வெள்ளைக் கொடி காட்டிய பாகிஸ்தான்: இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதால், உயிரிழந்த தங்களது படையினரின் சடலங்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாக துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தும்படி வெள்ளைக் கொடியை அசைத்து பாகிஸ்தான் படையினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து, பிஎஸ்எஃப் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தியது என்றார் அவர்.
முன்னதாக, ஜம்மு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநர் டி.கே. பாதக் புதன்கிழமை எடுத்துரைத்தார்.
அப்போது அவரிடம், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பிஎஸ்எஃப் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். அதையடுத்தே, பாகிஸ்தானுக்கு இந்தியத் தரப்பில் கடுமையான பதிலடி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு ஊடுருவ முயற்சித்தனர்.
இதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பிஎஸ்எஃப் வீரர்கள் கண்டறிந்து துப்பாக்கியால் சுடவே, பாகிஸ்தான் பகுதிக்குள் பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“எல்லையில் 170 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்’: இதனிடையே, ஸ்ரீநகரைத் தலைமையிடமாகக் கொண்ட சினார் படைப்பிரிவுகளின் தளபதி சுப்ரதா சாஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவுக்குள் ஊருவுவதற்காக 160 முதல் 170 பயங்கரவாதிகள், எல்லையில் காத்திருக்கின்றனர். அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது’ என்றார்.
பாரிக்கர் அதிரடி உத்தரவு
பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இருமடங்கு அதிகமான சக்தியுடன் பதிலடி கொடுக்கும்படி இந்திய ராணுவத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தனது நிலையில் இருந்து பின்வாங்காமல், தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த மீறல்கள் எதுவும் நடந்தால், இந்திய ராணுவம் இருமடங்கு சக்தியுடன் பதிலடி கொடுக்கும். இந்திய ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால், அவர்கள் கொல்லப்படுவார்கள்.
அதேசமயம், இந்திய ராணுவ வீரர்களை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்றும், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு மட்டுமே பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
-http://www.dinamani.com