காஷ்மீரில் ஆட்சி: பாஜகவுக்கு பிடிபி மறைமுக அழைப்பு

  • மெஹபூபா முப்தி
    மெஹபூபா முப்தி

“சட்டப்பேரவைத் தேர்தலில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (பிடிபி), ஜம்முவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.

இதன்மூலம், பாஜகவுக்கு அவர் மறைமுக அழைப்பு விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஜம்மு} காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும், அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், மாநில ஆளுநர் என்.என். வோராவின் அழைப்பை ஏற்று, ஜம்முவில் அவரை பிடிபி தலைவர் மெகபூபா முஃப்தி, புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

பிறகு செய்தியாளர்களிடம் மெகபூபா முஃப்தி கூறியதாவது:

எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், உறுதியாகவும், கொள்கைகளில் இணக்கம் ஏற்படும் வகையிலும் இருக்க வேண்டும். அப்படி அமைக்கப்படாத கூட்டணி ஒருபோதும் பயனளிக்காது.

எந்தக் கட்சியாக இருந்தாலும், பிடிபியின் நிபந்தனைகளை அக்கட்சி ஏற்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நேரு காலம் முதல் தற்போது வரை, பிரதமர் பதவிக்கு யார் வந்தாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, ஹுரியத் தலைவர்களுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரைத் தொடர்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சில காலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பின்னர் நிறுத்திவிட்டது என்று மெகபூபா முஃப்தி கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிடிபிக்கு 55 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று மற்றொரு கேள்விக்கு மெகபூபா பதிலளித்தார்.

பாஜக வரவேற்பு: இதையடுத்து, பிடிபியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு காத்திருக்கிறோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாஜக தலைவர் ராம் மாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊடகங்கள் வாயிலாக பாஜகவுக்கு மெகபூபா அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்கிறோம். அவர்களுடன் முறைப்படி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு காத்திருக்கிறோம் என்று ராம் மாதவ் கூறினார்.

காங்கிரஸ்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான பணிகளை பிடிபி கட்சி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் சையஃபுதீன் சோஸ் கூறினார்.

பாஜக அல்லாத அரசு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அல்லாத அரசு விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 3 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் ஜனநாயக முன்னணி, ஏ.ஐ.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அந்த எம்எல்ஏக்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளிவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளில் பாஜக ஈடுபடும். அதற்கான அரசியலை அக்கட்சி ஏற்கெனவே தொடக்கி விட்டது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், நிலையான அரசு அமைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: