ஏர் கலப்பை ஏழு பிறப்பிற்கும் வாழ்வளிக்கிறது!

itவிவசாயத்தை தொழிலாக கொண்ட நமது மண்ணில், புழுதியில் கிடந்து நாம் பட்ட கஷ்டம் போதும் என்று குடும்ப பெரியவர்கள் முடிவெடுத்து பிள்ளைகளை கம்ப்யூட்டர் படிப்பு படிக்க வைக்கின்றனர்.

பொன் விளையும் பூமியை கூட விற்று பிள்ளைகளை கம்ப்யூட்டர் கல்வி படிக்க வைக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் படித்த கல்வி அவர்களது வாழ்க்கைக்கு பயன் தந்ததா என்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறி தான் எழுகிறது. சாப்ட்வேர் துறையில் பட்டம் பெற்று வேலையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை பல நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்ப துவங்கியுள்ளது தான் இக்கேள்வி எழ முக்கிய காரணம்.

இப்படி தான் கடந்த வருடம் ஐ.பி.எம்., சிஸ்கோ மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இந்த நிலையில் சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டி.சி.எஸ். தன் பங்குக்கு 25000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

பெரும்பாலும் மத்திய நிலையில் உள்ள மேலாளர்கள் மற்றும் கன்சல்டன்ட் ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இம்முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வேலைக்கு முழு கியாரண்டி என்று நம்பப்படும் நிறுவனங்களில் டி.சி.எஸ். முதன்மையானது. 2014-15 ஆம் நிதியாண்டில் 35000+ புதிய ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் கூறிய நிலையில், தற்போது 25000 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அந்நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஏ.,பி.,சி.,டி.,இ., என தர வரிசைப்படுத்தியுள்ளது. அதை வைத்து ‘ஏ’ திறமைமிக்க ஊழியர் எனவும் ‘இ’ திறமை குறைவான ஊழியர் என்றும் அந்நிறுவனம் முடிவு செய்கிறது. அந்த வகையில் ‘சி’ மற்றும் ‘டி’ தர வரிசையில் இடம் பிடித்துள்ள ஊழியர்களுக்கு ‘டாட்டா’ காட்ட டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி நாளுக்கு நாள் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்களுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அடுத்து அவர்களது நிலைமை என்னவாகும் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டும். தற்போது இத்துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் எல்லாம் தங்கள் வருமானத்தை சேமித்து வைத்தார்களா என்று கேட்டால், இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். ஏனென்றால் இவர்களை போன்ற இளிச்சவாயர்களுக்காகவே டோமினோஸ், கே.எப்.சி., மெக் டொனால்ட்ஸ், மேரி பிரவுன் ஆகிய பன்னாட்டு உணவகங்களும், லூயிஸ் பிலிப் மற்றும் லெவிஸ் போன்ற பன்னாட்டு துணிக்கடைகளும் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன.

இவர்கள் வாங்கும் சம்பளத்தை கொண்டு, இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குள் சென்று செலவு செய்தால் கூட பரவாயில்லை. ஆனால் இவன் நல்லா சம்பாதிக்கிறான். இவன் கிட்ட இருந்து நாமும் கொஞ்சம் சுரண்டலாம் என்று பல்வேறு வங்கிகள் தரும் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தி செலவுகளை செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களது வேலை பறிபோனால் வாங்கிய கடனை இவர்கள் எப்படி அடைப்பார்கள். இது போதாதென்று வார விடுமுறையில் அடிக்கும் கூத்தும், கும்மாளங்களும் இவர்கள் பர்சையும் காலியாக்கிவிட்டு, உடல்நிலையும் மோசமாக்கி விடுகிறது.

சரி. அரசாங்கமாவது இவர்கள் மீது அக்கறை கொண்டு ஏதாவது திட்டங்களை தீட்டியுள்ளதா என்று கேட்டால் அதுவும் இல்லை. இளைஞர்களை எல்.ஐ.சி. போன்ற பாலிசிகளில் முதலீடு செய்ய வைப்பதை விட்டு விட்டு ஏ.சி. பேருந்துகளில் சொகுசு சவாரி செய்ய வைத்து தன் பங்குக்கு இளைஞர்களின் பர்சை காலி செய்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓடும் பெரும்பாலான ஏ.சி. பேருந்துகள் ஐ.டி.(ஓ.எம்.ஆர்)சாலையில் தான் ஓடுகின்றன என்பதே இதற்கு சான்று.

இப்படி தங்கள் பிள்ளைகள் படித்த படிப்பிற்கு வேலையும் கிடைக்காமல், கிடைத்த வேலையும் பறிபோய் விட்டதை காணும் பெற்றோர்கள், விவசாய நிலத்தையும் பறிகொடுத்து விட்டோமே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். விவசாயம் செய்திருந்தால் கூட தங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கும் என்ற நினைப்பு தான் அவர்களது சிந்தனையில் தற்போது மேலோங்கும். ஆக ஏர் கலப்பை ஏழு பிறப்புக்கும் வாழ்வளிக்கிறது. கம்ப்யூட்டர் கல்வி கஞ்சிக்கே லாட்டரி அடிக்க வைக்கிறது என்பது கண் கூடாக தெரிகிறது. இனியாவது பெற்றோர்களும், இளைஞர்கள் மற்றும் அரசும் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

-http://www.maalaimalar.com

TAGS: