குஜராத் மாநில கடற்பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்ததால், அதிலிருந்தவர்கள் படகை வெடிக்க வைத்து தகர்த்தனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் மார்க்கமாக நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைப்போன்று மீண்டும் அதுபோன்ற தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
கடந்த வாரம் பெங்களூருவில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் சென்னை பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து நாடு முழுவதுமே பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து 365 கி.மீ. தொலைவில், இந்திய கடல் பகுதிக்குள் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய அந்நாட்டு மீன்பிடி படகு ஒன்று 4 பேருடன் நேற்று காலை சென்று கொண்டிருந்ததை இந்திய கடலோர காவல் படையினர் கண்டனர். உடனே அப்படகை சுற்றி வளைத்த இந்திய கடலோர படையினர், படகை நிறுத்துமாறு எச்சரித்தனர்.
ஆனால் அந்த படகு நிற்காமல் வேகமாக செல்ல முயன்றபோது, இந்திய படையினர் அதனை வழிமறித்து நிறுத்தியபோது, அந்த படகில் இருந்தவர்கள் உள்ளே இருந்த வெடி பொருட்களை வெடிக்கச் செய்தனர். இதனையடுத்து அந்த படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு மூழ்கிய படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படகில் வந்தவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்றும், இந்திய படை அவர்களை சுற்றிவளைத்ததால் படகை வெடிக்கச் செய்து அவர்கள் மாண்டுபோனதாகவும் கூறப்படுகிறது. தக்க நேரத்தில் இந்திய கடலோர காவல் படை அவர்களை சுற்றிவளைத்ததால், தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நிகழ்த்த இருந்த நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilcnnlk.com